செய்திகள்
சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் ராகவன்

ஒரு வழக்கை அரசே நாசப்படுத்த முடியும் என்பதற்கு போபர்ஸ் வழக்கு உதாரணம் : சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் ராகவன்

Published On 2020-10-21 21:46 GMT   |   Update On 2020-10-21 21:46 GMT
உண்மையான ஒரு வழக்கை, ஒரு கட்சியினால் நடத்தப்படுகிற அரசே நாசப்படுத்த முடியும் என்பதற்கு போபர்ஸ் வழக்கு ஒரு உதாரணம் என்று அதை விசாரித்த சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் ராகவன் கூறி உள்ளார்.
புதுடெல்லி:

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஊழல் வழக்குகளில் ஒன்று, போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு ஆகும்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் சுவீடன் நாட்டின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து இந்திய ராணுவத்துக்கு பீரங்கிகளை வாங்கியதில் அன்றைய அரசியல்வாதிகளுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும், அதிகார வர்க்கத்துக்கும் ரூ.64 கோடி அளவுக்கு லஞ்சம் தரப்பட்டதாக புகார் எழுந்தது.

இதில் ராஜீவ் காந்தி மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அது மட்டுமின்றி, 1989-ம் ஆண்டு, ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசின் வீழ்ச்சிக்கும் இந்த ஊழல் வழிவகுத்தது.

இந்த ஊழலில் அன்றைய காங்கிரஸ் அரசு சி.பி.ஐ. மூலம் வழக்கு பதிவு செய்தாலும் மொத்த வழக்கும் நீர்த்துப்போய் விட்டது என்பதுதான் வரலாற்று உண்மைகளாக அமைந்துள்ளது.

ஏனென்றால் இந்த வழக்கில் ராஜீவ் காந்தி, பட்நாகர் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட் டுகளை டெல்லி ஐகோர்ட்டு 2004-ம் ஆண்டு ரத்து செய்து விட்டது. 2005-ம் ஆண்டு மே மாதம், அதே கோர்ட்டு இந்துஜா சகோதரர் கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்தது.

2011-ம் ஆண்டு, சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு குவாத்ரோச்சியை வழக்கில் இருந்து விடுவித்தது. 2018-ம் ஆண்டு இந்த வழக்கில் சி.பி.ஐ. செய்த மேல்முறையீட்டை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.

இந்த ஊழல் வழக்கை விசாரித்தவர், தமிழக ஐ.பி.எஸ். அணியை சேர்ந்தவரும், சி.பி.ஐ. இயக்குனராக இருந்தவருமான ஆர்.கே.ராகவன் ஆவார்.

இவர் தனது சுய சரிதையை ‘எ ரோடு வெல் டிராவல்ட்’ (‘நன்றாக பயணித்த ஒரு சாலை’) என்ற பெயரில் புத்தகமாக எழுதி உள்ளார். இதில் அவர் போபர்ஸ் ஊழல், ஒன்றுமில்லாமல் போனது பற்றிய தனது நினைவுகளை பதிவு செய்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-

போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் லஞ்சம் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டிருக்கலாம். ஆனாலும், இதை உறுதி செய்வது கடினம் ஆகும்.

ஒரு உண்மையான வழக்கை எவ்வாறு ஒரு கட்சியால் நடத்தப்படும் அரசாங்கம் நாசப்படுத்த முடியும் என்பதற்கு போபர்ஸ் வழக்கு ஒரு உதாரணம் ஆகும்.

1990-களிலும், 2004-14 ஆண்டுகளிலும் சி.பி.ஐ.யை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களின் தோள்களில் (காங்கிரஸ் அரசுகளின் தோள்களில்) குற்றவாளிகள் வசதியாக உட்கார்ந்து கொண்டார்கள்.

ராஜீவ் காந்தி ஆட்சியில்தான் போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. காரணம், ஒரு முழுமையான விசாரணையை செய்வதை தவிர அன்று ராஜீவ் காந்தி அரசுக்கு வேறு வழியில்லை.

இந்த ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை சர்ச்சைக்குரியது மட்டுமல்ல முக்கியமானதும் ஆகும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்த குற்றப்பத்திரிகையில் ராஜீவ் காந்தி நீதிமன்ற விசாரணைக்கு அனுப்ப முடியாத குற்றம் சுமத்தப்பட்டவராக சேர்க்கப்பட்டிருந்தார். (அப்போது ராஜீவ் காந்தி உயிருடன் இல்லை.) இந்த வழக்கில் இத்தாலி தொழில் அதிபர் ஒட்டாவியோ குவாட்ரோச்சி, முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளர் எஸ்.கே. பட்நாகர், வெளிநாடுவாழ் இந்திய தொழில் அதிபர் விஷ்வேஸ்வர் நாத் சத்தா என்ற வின்சத்தா, போபர்ஸ் நிறுவனம், அதன் அதிபர் மார்டின் ஆர் உள்ளிட்டோர் மீது குற்றம்சுமத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News