செய்திகள்
பிரதமர் மோடி

வெளிநாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக செயல்படும் இந்திய விஞ்ஞானிகள் - பிரதமர் மோடி பெருமிதம்

Published On 2021-06-04 21:10 GMT   |   Update On 2021-06-04 21:10 GMT
கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2-வது அலையை வீழ்த்துவதற்காக இந்தியா முழு வீச்சில் போராடிக் கொண்டிருக்கிறது.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் சி.எஸ்.ஐ.ஆர். என்று அழைக்கப்படுகிற அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகளுடன் காணொலிக் காட்சி வழியாக நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

கொரோனா-வைரஸ் பெருந்தொற்று நோய் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

ஆனால் கடந்த காலத்தில் ஒரு பெரிய மனித குல நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம், அறிவியல் ஒரு சிறந்த எதிர்காலத்துக்கான வழியை ஏற்படுத்தி உள்ளது. அறிவியலின் அடிப்படை இயல்பு, நெருக்கடியின்போது தீர்வுகளையும், சாத்தியங்களையும் கண்டுபிடிப்பதின் மூலம் புதிய வலிமையை உருவாக்குவதாகும்.

சென்ற நூற்றாண்டில் புதுமைகள் படைப்பதற்கு வெளிநாடுகளிலும் சரி, நமது நாட்டிலும் சரி விஞ்ஞானிகள் பல காலம் காத்திருந்தனர். ஆனால் இப்போது நமது நாட்டின் விஞ்ஞானிகள், பிற நாடுகளில் உள்ள விஞ்ஞானிகளுக்கு இணையாக, அவர்களின் வேகத்தில் செயல்படுகிறார்கள்.

கொரோனா-வைரஸ் பெருந்தொற்று உருவாகி ஒரே வருடத்தில், மனித குலத்தைக் காப்பதற்காக தடுப்பூசியை உருவாக்கி இருப்பது இதுவரை வரலாற்றில் நடந்திராத ஒன்றாகும். கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசிகள் மட்டுமல்லாது பரிசோதனைக் கருவிகள், தேவையான பிற கருவிகள், புதிய சக்திவாய்ந்த மருந்துகளை விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள்.



வளர்ந்த நாடுகளுக்கு இணையாக அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் கொண்டு வருவது தொழில்துறைக்கும், சந்தைக்கும் சிறந்தது ஆகும்.

நாட்டின் இன்றைய குறிக்கோள்களும், 21-ம் நூற்றாண்டில் வாழும் நாட்டு மக்களின் கனவுகளும் ஒரு அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டவை. எனவே இந்த சி.எஸ்.ஐ.ஆர். போன்ற நிறுவனங்களின் குறிக்கோள்களும் சிறப்பானவை.

இன்றைய இந்தியாவில் நமது நோக்கம், சுய சார்பு ஆகும். நமது நோக்கம் வலிமையான இந்தியாவும் ஆகும். விவசாயம் தொடங்கி வானியல் வரை, பேரிடர் மேலாண்மை, பாதுகாப்பு தொழில்நுட்பம், தடுப்பூசி, மெய்நிகர் நிகழ்வு, உயிரி தொழில்நுட்பம், பேட்டரி தொழில் நுட்பம் என பல துறைகளிலும் இந்தியா சுய சார்பு அடைய விரும்புகிறது.

நிலையான வளர்ச்சியிலும், தூய்மையான எரிசக்தியிலும் உலகுக்கு இந்தியா வழிகாட்டி வருகிறது. சாப்ட்வேர் என்னும் மென்பொருள், செயற்கைக்கோள் மேம்பாடு ஆகியவற்றின் பங்களிப்பால் மற்ற நாடுகளின் முன்னேற்றத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என தெரிவித்தார்.
Tags:    

Similar News