ஆன்மிகம்
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி திருவிழா தொடங்கியது

Published On 2019-09-05 05:53 GMT   |   Update On 2019-09-05 05:53 GMT
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மாசி, மார்கழி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் சித்திரை, மார்கழி மாதங்களில் தாணுமாலய சாமிக்கும், ஆவணி மாதத்தில் திருவேங்கட விண்ணவ பெருமாளுக்கும் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆவணி மாத திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நேற்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 7.45 மணி அளவில் திருவேங்கட விண்ணவ பெருமாள் சன்னதியில் இருந்து மேள, தாளம் முழங்க கொடிப்பட்டம் கோவில் பிரகாரத்தை சுற்றி கொண்டுவரப்பட் டது. காலை 8.20 மணி அளவில் மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரு கொடிப்பட்டத்தை கொடிமரத்தில் ஏற்றினார். தொடர்ந்து கொடிபீடத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கொடியேற்று நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். விழாவையொட்டி தினமும் காலை 8 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இரண்டு அம்பாளும், பெருமாளும் வாகனத்தில் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

9-ம் நாள் திருவிழாவான வருகிற 12-ந் தேதி மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 10-ம் நாள் திருவிழாவான வருகிற 13-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், பெருமாள் பசு- கன்றுவின் முகத்தில் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில், கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.
Tags:    

Similar News