ஆன்மிகம்
உற்சவ மூர்த்திக்கும், பராசக்தி அம்மனுக்கும் வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜை

Published On 2019-12-18 04:46 GMT   |   Update On 2019-12-18 04:46 GMT
அருணாசலேஸ்வரர் கோவில் மார்கழி மாத பிறப்பையொட்டி திருவெம்பாவை சொற்பொழிவு நடத்தப்பட்டு சிறப்புபூஜை நடந்தது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இக்கோவிலில் கடந்த 1-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 10-ந் தேதி 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் வருகிற 20-ந் தேதி வரை மலை உச்சியில் காட்சி அளிக்கும். தீபத் திருவிழாவின்போது அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வர முடியாத பக்தர்கள் தற்போது திருவண்ணாமலைக்கு வருகின்றனர். இதனால் கோவிலில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு கோவிலில் அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் திருவெம்பாவை சொற்பொழிவு நடந்தது. பின்னர் சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து உற்சவ மூர்த்திக்கும், பராசக்தி அம்மனுக்கும் வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
Tags:    

Similar News