ஆன்மிகம்
ஜெனகை மாரியம்மன் கோவில்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் 25-ந்தேதி நடக்கிறது

Published On 2020-11-03 08:44 GMT   |   Update On 2020-11-03 08:44 GMT
பிரசித்தி பெற்ற சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற ஜனவரி மாதம் 25-ந் தேதி நடக்கிறது.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு வைகாசி மாதம் அமாவாசைக்கு பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடந்து 17 நாட்கள் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் 6-ம் நாள் திருவிழா கழுவேற்றம், 9-ம் நாள் திருவிழா பால்குடம், அக்னிச்சட்டி, பூப்பல்லக்கு, 10-ம் நாள் திருவிழா பக்தர்கள் பூக்குழி இறங்குதல், 16-ம் நாள் திருவிழா தேர் திருவிழா, 17-ம் நாள் திருவிழா வைகை ஆற்றில் தீர்த்தவாரி சிறப்பாக நடைபெறும். இதையொட்டி வெளிமாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வார்கள்.

இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு இப்பகுதி பக்தர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இதையொட்டி கடந்த ஆண்டு திருப்பணி கமிட்டி அமைக்கப்பட்டு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாணிக்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் பாலாலயம் நடந்தது. இதற்கான கும்பாபிஷேக விழா கடந்த மார்ச் 30-ம் தேதி நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

ஆனால் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக கும்பாபிஷேக விழா ஒத்திவைக்கப்பட்டது. தற்போது தளர்வு ஏற்பட்டுள்ளதால் இப்பகுதி பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் திருப்பணி கமிட்டியிடம் கும்பாபிஷேகத்தை நடத்த கோரிக்கை வைத்தனர். இதன் பேரில் நேற்று காலை ஜெனகை மாரியம்மன் கோவில் அன்னதான மண்டபத்தில் கும்பாபிஷேக விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. திருப்பணி கமிட்டி தலைவர் பதஞ்சலி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

துணை தலைவர்கள் மணிமுத்தையா, பால்பாண்டி, முருகேசன், நாகராஜன், கணேசன், அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் இளஞ்செழியன் வரவேற்றார். கூட்டத்தின் முடிவில், கவுரவ தலைவர் மாணிக்கம் எம்.எல்.ஏ. கும்பாபிஷேக விழா வருகிற ஜனவரி மாதம் 25-ந் தேதி நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டதாக அறிவித்தார். ஆலய பணியாளர் பூபதி நன்றி கூறினார்.

கூட்டத்தில் சீர்பாதம் முருகேசன், வக்கீல் குருநாதன், கார்த்திக், ஆலயமணி, பார்வர்டு பிளாக் தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவேற்றப்பட்ட தீர்மான புத்தகத்தை ஜெனகை மாரியம்மன் காலடியில் வைத்து குறித்த தேதியில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்று வேண்டி கொண்டனர். சண்முகம் பூசாரி பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.
Tags:    

Similar News