செய்திகள்
பிரசாரத்தில் ஈடுபட்ட ஜி.ராமகிருஷ்ணன்

அ.தி.மு.க.- பா.ஜ.க. அணிக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது - ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

Published On 2021-03-22 11:39 GMT   |   Update On 2021-03-22 11:39 GMT
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார் என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்சி:

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து திருச்சி தாராநல்லூர் கீரைகடை பஜார் பகுதியில் நேற்று இரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார். இது உறுதி. எடப்பாடி பழனிசாமி, தான் ஒரு விவசாயி என்று கூறி வருகிறார். ஆனால் அவர் உண்மையான விவசாயி அல்ல. விவசாயியாக இருந்தால் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்களை ஆதரித்து இருக்கமாட்டார். கரும்பு விவசாயிகளுக்கு இந்தியா முழுவதும் ரூ.15 ஆயிரம் கோடி தொகை ஆலை உரிமையாளர்களால் வழங்கப்பட வேண்டும். ஆனால் வழங்கப்படவில்லை. அது போன்ற ஒரு நிலை தான் ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் ஏற்படும். ஆதலால் இதனை கைவிட வேண்டும். புதிய கல்விக்கொள்கையை தமிழகத்தில் அமல் படுத்துவதன் மூலம் அ.தி.மு.க. அரசு பா.ஜ.க.விடம் கட்சியை அடகு வைத்து விட்டது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் போடப்படும் என கூறப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு ஆதரவான செய்தி. எனவே விவசாயிகள் இதனை புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. அணிக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது. இந்த அலை தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News