ஆன்மிகம்
நத்தம் மாரியம்மன்

நத்தம் மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் விழா நாளை நடக்கிறது

Published On 2021-03-01 07:59 GMT   |   Update On 2021-03-01 07:59 GMT
நத்தம் மாரியம்மன் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் விழா நடக்கிறது.
நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கடந்த மாதம் 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) பக்தர்கள் அம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை கொண்டு வந்து காணிக்கையாக செலுத்தும் நிகழ்ச்சியும், தொடர்ந்து அரண்மனை பொங்கல் வைத்தல், மாவிளக்கு, காவடி வகையறாக்கள் எடுத்து வரப்படும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

நாளை (செவ்வாய்க்கிழமை) திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் விழா நடக்கிறது. இதையொட்டி காலையில் கழுகு மரம் ஊன்றப்படுகிறது. பின்னர் மாலையில் கழுகுமரம் ஏறிய பிறகு விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பூக்குழியில் இறங்குகின்றனர். அன்றிரவு கம்பம், அம்மன் குளத்தில் கொண்டு போய் சேர்க்கப்படும்.

மறுநாள் காலையில் அம்மன் மஞ்சள் நீராடுதல் நடைபெறுகிறது. அன்றிரவு அலங்கரிக்கப்பட்ட வண்ண பூப்பல்லக்கில் மாரியம்மன் எழுந்தருளி நகர்வலம் வருகிறார். இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும், திருக்கோவில் பூசாரிகளும், விழாக்குழுவினரும் செய்து வருகின்றனர். பொது சுகாதாரம், குடிநீர் வசதிகளை நத்தம் பேரூராட்சி நிர்வாகத்தினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை, நத்தம் போலீசாரும் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News