செய்திகள்
அதிமுக

உள்ளாட்சி மறைமுக தேர்தல் - பஞ்சாயத்து, ஒன்றிய தலைவர்கள் தேர்தலில் அதிமுக வெற்றி

Published On 2020-01-12 07:36 GMT   |   Update On 2020-01-12 07:36 GMT
தமிழகத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலில் அதிமுக அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை:

உள்ளாட்சிகளுக்கான மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது.

மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியங்களுக்கு கட்சி அடிப்படையில் நடந்தன.

முதலில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த உறுப்பினர்கள் தலைவர்களை தேர்வு செய்யும் மறைமுக தேர்தல் முறை பயன்படுத்தப்பட்டது.

மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளில் மொத்தம் 515 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. அதில், தி.மு.க. 244 இடங்களிலும், அ.தி.மு.க. 214 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.

5,090 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் தி.மு.க. 2099 இடங்களிலும், அ.தி.மு.க. 1789 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இந்த 2 தேர்தலிலுமே தி.மு.க. கூட்டணிதான் அதிக இடங்களை பிடித்து இருந்தது. எனவே, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஒன்றிய தலைவர் என இரு பதவிகளிலும் தி.மு.க. கூட்டணியே அதிக இடங்களை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நேற்று நடந்த மறைமுக தேர்தல் முடிவில் அ.தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது.

 


மொத்தம் உள்ள 27 மாவட்டங்களில் சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. மீதி உள்ள 26 இடங்களில் 14 இடங்களை அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றி உள்ளது. இதில், ஒரு இடம் பா.ம.க.வுக்கு சென்றது.

தி.மு.க. கூட்டணி 12 இடங்களை மட்டுமே கைப்பற்றி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் கட்சி மாறி அ.தி. மு.க.வுக்கு ஓட்டு போட்டதால் அங்கு அ.தி.மு.க., மாவட்ட பஞ்சாயத்தை கைப்பற்றி இருக்கிறது.

இந்த மாவட்டத்தில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 22. அதில், தி.மு.க. கூட்டணி 13 இடங்களை கைப்பற்றி இருந்தது. அதன்படி பார்த்தால் தி.மு.க. கூட்டணிதான் பஞ்சாயத்து தலைவர் பதவியை கைப்பற்றி இருக்க வேண்டும்.

ஆனால், நேற்று தேர்தல் நடந்தபோது தி.மு.க.- காங்கிரசை சேர்ந்த 3 உறுப்பினர்கள் கட்சி மாறி அ.தி.மு.க. வுக்கு ஓட்டு போட்டனர். இதனால் அ.தி.மு.க. அந்த மாவட்ட பஞ்சாயத்தை கைப்பற்றி உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 16 உறுப்பினர்களில் அ.தி.மு.க. - தி.மு.க. கட்சிகள் சரிபாதியாக தலா 8 உறுப்பினர்களை பெற்று இருந்தன.

இந்த நிலையில் தி.மு.க. உறுப்பினர் ஒருவரை அ.தி.மு.க.வினர் கடத்தி சென்றதாக புகார் கூறப்பட்டு இருந்தது. ஆனால், தேர்தல் நடந்த போது 8 பேர் மட்டுமே ஆஜராகி இருந்தார்கள்.

தேர்தல் நடத்தை விதி முறைகளின்படி பாதிக்கு மேல் ஒருவராவது இருக்க வேண்டும். அதன்படி 9 பேர் இருந்தால்தான் அது ‘கோரம்’ என கருதி தேர்தல் நடத்தப்படும். அந்த ‘கோரம்’ இல்லாததால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு விட்டது.

பஞ்சாயத்து யூனியன் தலைவர் தேர்தலிலும் இதே போல் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் கட்சி மாறி ஓட்டு போட்டதால் அ.தி.மு.க.வுக்கு கூடுதல் ஒன்றிய தலைவர் பதவிகள் கிடைத்துள்ளன.

உறுப்பினர்கள் எண்ணிக்கைப்படி பார்த்தால் தி.மு.க.வுக்கு தற்போது கிடைத்திருக்கக்கூடிய பஞ்சாயத்து யூனியன் தலைவர் பதவிகளை விட கூடுதலாக 20 தலைவர் பதவிகள் கிடைத்திருக்க வேண்டும்.

ஆனால், அந்த பதவிகள் எல்லாம் கட்சி மாறி ஓட்டு போட்டதால் அ.தி.மு.க.வுக்கு சென்று விட்டன.

இதனால் தி.மு.க.வை விட அ.தி.மு.க. கட்சி கூடுதலாக 15 இடங்களை பெற்றுள்ளது.கிருஷ்ணகிரி மாவட் டத்தில் ஊத்தங்கரை, தர்மபுரி மாவட்டத்தில் மொரப்பூர் ஆகியவற்றில் பிரச்சினை எழுந்ததால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுபோல் மேலும் பல யூனியன்களிலும் சேர்த்து 27 யூனியன்களுக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. அங்கும் பலர் கட்சி மாறி ஓட்டு போடும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதேபோல் பஞ்சாயத்து யூனியன் துணைத்தலைவர்கள் பதவிகளிலும் கட்சி மாறி ஓட்டு போட்டது அதிகமாக நடந்துள்ளது.

அ.தி.மு.க. 124 துணைத் தலைவர் பதவிகளையும், தி.மு.க. 118 துணைத்தலைவர் பதவிகளையும் கைப்பற்றி உள்ளன.

Tags:    

Similar News