செய்திகள்
உள்நாட்டு விமானநிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வதை அமைச்சர் ஆய்வு செய்த காட்சி

2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்: கேரள பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2021-08-01 06:47 GMT   |   Update On 2021-08-01 07:53 GMT
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்படி தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளும் கடுமையாக கூறப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் பரிசோதனைக்கு பிறகே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். விமான நிலையத்தில் நடக்கும் பரிசோதனையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலையில் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபரிடம் கூறியதாவது:-

ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படி விமான நிலையங்களில் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இங்கிலாந்து, பிரேசில், தென்ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு உடல் வெப்பம் மட்டுமின்றி ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையும் கட்டாயம்.

உடலின் வெப்பத்தை பரிசோதிக்கும் போது கருவியில் சிவப்பு நிற எச்சரிக்கை தெரிந்தால் உடலில் ஏதோ மாறுபாடு இருப்பதற்கான அறி குறியாகும். அவர்களுக்கு ரூ.900 கட்டணத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படும். இதில் பரிசோதனை முடிவு தெரிய 4 மணிநேரம் ஆகும்.

தற்போது அதிநவீன பரிசோதனை கருவி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த கருவி மூலம் பரிசோதித்தால் 13 நிமிடங்களில் முடிவு தெரிந்து விடும். அந்த கருவி இன்னும் 2 நாட்களில் பயன்பாட்டுக்கு வந்து விடும்.

ஏற்கனவே குறிப்பிட்ட நாடுகளை தவிர மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேன் மட்டும் செய்யப்படும்.

விமான பயணிகளை தனிமைப்படுத்தும் தேவை இதுவரை ஏற்படவில்லை. உடல் வெப்ப மாறுபாடு தெரிய வந்தால் விமான நிலையத்தில் தனிமைப்படுத்தியே பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. முழு வசதி உள்ள ஆய்வகம் பரிசோதனை அமைப்புகள் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 3 நாட்களாக தொற்று அதிகரித்து வருவதால் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்படி தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தொற்று அதிகமாக இருப்பதால் அங்கிருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

அதன்படி வருகிற 5-ந் தேதி அதிகாலை முதல் கேரளாவில் இருந்து வருபவர்கள் பரிசோதனைக்கு பிறகே தமிழ்நாட்டுக்குள் வர அனுமதிக்கப்படுவார்கள்.

அதாவது 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவு பற்றிய சான்றிதழ் அவசியம் அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டு 14 நாட்கள் ஆனதற்கான சான்றிதழ் கட்டாயம்.

இந்த இரண்டில் ஒரு ஆவணம் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு வரமுடியும். மற்றவர்கள் வர அனுமதி இல்லை. கோவை, கன்னியாகுமரி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழகத்துக்கு வருவதற்கு 13 இடங்கள் உள்ளன. அந்த பகுதிகள் 5-ந் தேதி அதிகாலை முதல் போலீசின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.


கேரளாவில் இருந்து சாலை மார்க்கமாகவும், விமானம் மூலமும், ரெயில்கள் மூலமும் தமிழ்நாட்டுக்குள் வரும் அனைவருமே இந்த கட்டுப்பாட்டின்படிதான் அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன், இ.கருணாநிதி எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்...சென்னை மார்க்கெட் பகுதிகளில் கொரோனா பரிசோதனை - பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்

Tags:    

Similar News