செய்திகள்
நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கிய காட்சி.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்-அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வேண்டுகோள்

Published On 2021-07-17 10:21 GMT   |   Update On 2021-07-17 10:21 GMT
மருத்துவக் குழு மற்றும் உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் அருகே உள்ள சாலைப்புதூரில் சாலை அமைக்க பூமி பூஜை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் நடைபெற்றது. விழாவில் தாராபுரம் சப்&கலெக்டர் ஆனந்த் மோகன் வரவேற்று பேசினார். இதில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு, தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாடு திட்டம் 2020-21ன் கீழ் ரூ.42.64 லட்சம் மதிப்பில் சாலை பணியை பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.
 
பின்னர் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் நலத்திட்டத்தின் கீழ் வருவாய்த்துறை சார்பில் முதியோர் உதவித்தொகை 16 பேருக்கும், விதவை உதவித்தொகை 3 பேருக்கும், கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை 1 நபருக்கும் வழங்கப்பட்டது.

மேலும் இலவச வீட்டுமனை பட்டா 43 பேருக்கு, குழந்தைகள் நல மேம்பாட்டு துறை சார்பில் பெற்றோர் இழப்பீட்டு நிதி 1 நபருக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் 2 நபருக்கு என மொத்தம் 66 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சத்து 20 ஆயிரத்து 254 மதிப்பில் நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட்டது.
 
அப்போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

தற்போது கொரோனா காலமாக இருப்பதால் முதலமைச்சர் மருத்துவக் குழு மற்றும் உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். 2-வது அலை வீரியம் அதிகரித்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த உங்களுடைய ஒத்துழைப்பு அவசியம். ஆகவே தேவையின்றி கூட்டம் கூடுவது, வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

அப்படியே கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்லும்போது இரண்டு முக கவசங்கள் அணிந்து செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் லக்கமநாயக்கன்பட்டி சேடன் குட்டை பழனிச்சாமி, நாகமநாயக்கன்பட்டி கவிதா, வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் சோமசுந்தரம், அன்னபூரணி, லோகநாதன், கட்சி நிர்வாகிகள் பத்மநாபன், மோள கவுண்டன்வலசு சந்திரசேகரன், கே.ஆர்.முத்துக்குமார்,சபரி,முருகானந்தம், காங்கேயம் தாசில்தார் சிவகாமி, மண்டல துணை தாசில்தார் மயில்சாமி, சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் ஜெயசிங்  உள்ளிட்ட வருவாய்த்துறை, வேளாண்துறை அதிகாரிகள், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஆணையாளர்கள் ஜெயக்குமார், விஜயகுமார் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News