செய்திகள்
பாஜக

பா.ஜனதாவுக்கு ஒரே ஆண்டில் ரூ.2,410 கோடி நன்கொடை

Published On 2020-01-10 10:46 GMT   |   Update On 2020-01-10 10:46 GMT
பாரதிய ஜனதா கட்சிக்கு 2018-2019 நிதி ஆண்டில் ரூ.2 ஆயிரத்து 410 கோடி தேர்தல் நன்கொடை கிடைத்துள்ளது. இதில், தேர்தல் பத்திரம் மூலம் ரூ.1450 கோடி வசூல் செய்து இருக்கிறது.
புதுடெல்லி:

அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி பணிகள், தேர்தல் செலவுகளுக்காக நன்கொடைகள் வசூலித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

அதை நிறுவனங்கள், அமைப்புகள், பொது மக்களிடம் இருந்து வசூலித்துக்கொள்ளலாம்.

நன்கொடை கொடுத்தவர்கள் தொடர்பான விவரத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதில், நேரடியாக நன்கொடை பெறுவது மற்றும் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெறுவது என 2 வகையான திட்டங்கள் உள்ளன.

தேர்தல் பத்திர திட்ட முறை 2017-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய போதிலும் இந்த பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் அதிக அளவில் நன்கொடை வசூலித்துள்ளன.

2018-2019-ம் நிதி ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் காலம் நெருங்கிய காரணத்தால் அனைத்து அரசியல் கட்சிகளும் மிக அதிக அளவில் நன்கொடை வசூலித்துள்ளன.

இதில், எவ்வளவு வசூல் ஆனது, எவ்வளவு செலவு செய்யப்பட்டது போன்ற கணக்குகளை தேர்தல் கமி‌ஷனிடம் தாக்கல் செய்ய வேண்டும்.

அவ்வாறு 2018-2019 நிதி ஆண்டில் கிடைத்த நன்கொடை மற்றும் செலவு விவரங்களை அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் கமி‌ஷனிடம் தாக்கல் செய்துள்ளன.

அதன் பட்டியல் தேர்தல் கமி‌ஷன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி பாரதிய ஜனதா கட்சி அதிக அளவில் நன்கொடை வசூலித்துள்ளது தெரிய வந்துள்ளது.

அந்த கட்சிக்கு 2018-2019 நிதி ஆண்டில் ரூ.2 ஆயிரத்து 410 கோடி தேர்தல் நன்கொடை கிடைத்துள்ளது. இதில், தேர்தல் பத்திரம் மூலம் ரூ.1450 கோடி வசூல் செய்து இருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சிக்கு அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.1027 கோடி கிடைத்தது.

2-வது பெரிய கட்சியான காங்கிரசுக்கு ரூ.918 கோடி கிடைத்துள்ளது. இதில், தேர்தல் பத்திரம் மூலம் கிடைத்த தொகை ரூ.383 கோடி ஆகும்.

அதாவது காங்கிரசை விட பாரதிய ஜனதாவுக்கு 2½ மடங்கு அதிக அளவில் தேர்தல் நன்கொடை கிடைத்து இருக்கிறது.

காங்கிரசுக்கு அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.199 கோடி மட்டுமே கிடைத்து இருந்தது.

அதேபோல் திரிணாமுல் காங்கிரசுக்கு ரூ.192 கோடியும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு ரூ.100 கோடியும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ரூ.69 கோடியும் கிடைத்துள்ளன.

பாரதிய ஜனதாவுக்கு கிடைத்த ரூ.2 ஆயிரத்து 410 கோடியில் ரூ.1005 கோடியை செலவு செய்ததாக கூறி உள்ளது.

அதில், ரூ.792 கோடியை தேர்தல் செலவுக்காகவும், ரூ.435 கோடியை விளம்பரத்துக்காகவும் செலவிட்டதாக கூறி உள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த ரூ.918 கோடியில் ரூ.469 கோடியை செலவிட்டு இருப்பதாகவும், அதில், ரூ.369 கோடி தேர்தலுக்காக செலவிடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News