ஆன்மிகம்
இஸ்லாம் வழிபாடு

மறுமையின் நினைவலைகள்

Published On 2021-08-31 04:08 GMT   |   Update On 2021-08-31 04:08 GMT
இறைவன் காட்டிய வழியில் மனிதன் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் இம்மையிலும், மறுமையிலும் நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். உலகமும் சமாதான பூங்காவாக திகழும்.
யாரோ செய்த தவறு கொரோனாவாக வளர்ந்து உலகத்தை துவேஷம் செய்துகொண்டிருக்கிறது. தீயவர்கள் செய்த தவறுகளுக்கு உலக மக்கள் விலை கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

தவறு செய்தால் இறைவன் தண்டிப்பான் என்ற பயம் இல்லாமை, செல்வங்களைத் தர்மங்கள் செய்யாமல் சுயநலமாக செயல்படுவது, பணபலத்தில் ஏழைகளை உதாசீனம் செய்தல், குலப்பெருமை பேசி சண்டையிட்டுக் கொள்ளுதல், மனிதர்களுக்கு மட்டுமே இந்த பூமி படைக்கப்பட்டது போன்று, இயற்கை மற்றும் பிற உயிரினங்களை அழித்தல், முறையற்ற வருமானம் ஈட்டுதல்... இப்படி மனிதன் செய்த பல்வேறு தவறுகளால் உலகத்தில் குழப்பங்கள் ஏற்படுகின்றன. பாவங்களினால் ஏற்படும் விளைவுகள் குறித்து இவ்வாறு இறைவன் எச்சரிக்கை செய்கின்றான்:

“மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும், தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்”. (திருக்குர்ஆன்30:41)

அதுபோல மறுமை நாளில் இந்த உலகம் எப்படி இருக்கும் என்பதையும் திருக்குர்ஆன் இவ்வாறு சுட்டிக்காட்டி எச்சரிக்கிறது:

“அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான். தன் சகோதரனை விட்டும், தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்; தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும். அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும். (திருக்குர்ஆன் 80:34-37).

இறைவன் முன்பு நிற்கும் அந்த மறுமை நாளில் உங்களது அதிகாரம், பதவி, செல்வம் எதுவும் உதவாது. அப்போது அந்த மனிதன் நிலை எப்படி இருக்கும் என்பதை இந்த திருக்குர்ஆன் வசனங்கள் குறிப்பிட்டுகின்றன.

“என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே. என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே” (என்று அரற்றுவான்). (திருக்குர்ஆன் 69:28, 29)

இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. இந்த நேரத்தில், நாம் எங்கு? எப்போது? என்ன தவறு செய்தோம்? என்று யோசிப்போம். தவறுகளில் இருந்தும், பாவங்களில் இருந்தும் விலகி இருப்போம். செய்த தவறுகளுக்கும், பாவங்களுக்கும் இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்போம்.

இறைவன் காட்டிய வழியில் மனிதன் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் இம்மையிலும், மறுமையிலும் நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். உலகமும் சமாதான பூங்காவாக திகழும்.

ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.
Tags:    

Similar News