செய்திகள்
பிரதமர் மோடி

மகாராஷ்டிரா, அரியானா தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

Published On 2019-10-07 04:32 GMT   |   Update On 2019-10-07 04:32 GMT
மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரச்சார கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என பா.ஜ.க. அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலும், அரியானாவில் முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தலைமையிலும் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த இரு மாநிலங்களிலும் வரும் 21-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இவ்விரு மாநிலங்களிலும் ஆட்சியைத் தக்கவைப்பதற்கு பாஜக  தீவிரமாக வேலை செய்து வருகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா உள்பட பல்வேறு தலைவர்களின் பிரச்சார திட்டத்தை அக்கட்சி அறிவித்துள்ளது.

பா.ஜ.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிராவில் 9 கூட்டங்களிலும், அரியானாவில் 4 கூட்டங்களிலும் பிரதமர் மோடி பங்கேற்று ஆதரவு திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, மகாராஷ்டிராவில் 20 கூட்டங்களிலும், அரியானாவில் 10 கூட்டங்களிலும் கலந்து கொண்டு ஆதரவு திரட்ட உள்ளார். ஆனால், கடைசி நேரத்தில் மாற்றங்கள் வருவதற்கும் வாய்ப்புள்ளது என பாஜக தெரிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்த விவகாரம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு தேசிய பிரச்சனைகளை தேர்தல் பிரச்சாரம் மூலம் மக்களிடம் எடுத்துச்செல்ல பாஜக முடிவு செய்துள்ளது.
Tags:    

Similar News