செய்திகள்
பணம் மோசடி

பெண்ணிடம் ரூ.14¼ லட்சம் மோசடி- கணவரின் நண்பர்கள் 4 பேர் மீது வழக்கு

Published On 2020-11-20 07:31 GMT   |   Update On 2020-11-20 07:31 GMT
சிறப்பு பூஜை செய்த தாகக்கூறி பெண்ணிடம் ரூ.14¼ லட்சம் மோசடி செய்ததாக கணவரின் நண்பர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மலைக்கோட்டை:

திருச்சி சஞ்சீவி நகர் எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் ஆபிரகாம். இவரது மனைவி பிரித்ஜர் நிர்மலா (வயது 47).

இவர், சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் நிர்வாக உதவியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு ஆபிரகாம் மரணம் அடைந்து விட்டார்.

ஆபிரகாம் இறந்த பின்னர், அவரது நண்பர்களான ராஜா, பரிமளா, விஜய் மற்றும் மாலா ஆகியோர் சிறப்பு பரிகார பூஜை நடத்தி, பிரித்ஜர் நிர்மலாவிடம் இருந்து பல தவணைகளில் ரூ.14 லட்சத்து 21 ஆயிரத்தை பெற்று ஏமாற்றினர். அத்துடன் விடாமல், மீண்டும் பணம் கேட்டு தொல்லை கொடுத்ததுடன் அவதூறாக பேசியதுடன் பணம் கொடுக்காவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்கக்கூடும் என மிரட்டி பிரித்ஜர் நிர்மலாவை அச்சுறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என திருச்சி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பிரித்ஜர் நிர்மலா வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில், திருச்சி கோட்டை போலீசார் சம்பந்தப்பட்ட மோசடி நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது. கோர்ட்டு உத்தரவின்பேரில், நேற்று முன்தினம் திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், பணத்தை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட ராஜா, பரிமளா, விஜய் மற்றும் மாலா ஆகிய 4 பேர் மீது 420, 506 (1) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Tags:    

Similar News