செய்திகள்

புதுக்கோட்டையில் இருந்து பழனிக்கு புதிய பேருந்து: அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

Published On 2018-07-13 14:59 GMT   |   Update On 2018-07-13 14:59 GMT
புதுக்கோட்டையில் இருந்து பழனிக்கு புதிய பேருந்தை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதிய பேருந்துகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, கொடியசைத்து பஸ்களை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து  முன்னிலை வகித்தார். 

புதிய பேருந்துகளை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்து பேசியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகத்திற்கு பல்வேறு புதிய பேருந்துகளை வழங்கியுள்ளார். அதனடிப்படையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை மாவட்ட த்திற்கு வழங்கப்பட்ட புதிய பேருந்துகள்  தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

ஒரு புதிய பேருந்து புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து காலை 4.30 மணிக்கு புறப்பட்டு இலுப்பூர், விராலிமலை, மணப்பாறை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக பழனியை சென்றடையும். மீண்டும் அப்பேருந்து புதுக்கோட்டைவந்தடைந்து மாலை 4 மணிக்கு புதுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு மேற்கண்ட வழித் தடங்கள் வழியாக மீண்டும் பழனியை சென்றடையும். மேலும் மற்றொரு புதிய பேருந்து அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு ஆவுடையார்கோயில், மீமிசல், தொண்டி, தூத்துக்குடி வழியாக திருச்செந்தூரை சென்றடையும். மீண்டும் திருச்செந்தூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மேற்கண்ட வழித்தடங்கள் வழியாக மீண்டும் அறந்தாங்கியை வந்தடையும்.

இதன்மூலம் பயணிகள் சொகுசாகவும் மற்றும் பாதுகாப்பான பயணத்தையும் மேற்கொள்ள முடியும். எனவே பயணிகள் அனைவரும் தமிழக அரசின் இத்தகைய திட்டங்களை உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், பொது மேலாளர் ஆறுமுகம், நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன், துணை மேலாளர் (வணிகம்)  முத்துக்கருப்பையா, மத்திய தொலைத்தொடர்பு ஆலோசனைக்குழு உறுப்பினர் பாஸ்கர், அரசு அலு வலர்கள் மற்றும் பயணிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News