உள்ளூர் செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

அண்ணா பல்கலைக்கழகம் சான்றிதழ் கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும்- அன்புமணி கண்டனம்

Published On 2022-05-07 06:48 GMT   |   Update On 2022-05-07 06:48 GMT
அண்ணா பல்கலைக் கழகத்தில் மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்து விட்டாலோ, சேதமடைந்து விட்டாலோ அதற்கு பதிலாக புதிய சான்றிதழ் வாங்குவதற்கு இதுவரை ரூ.300 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

சென்னை:

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அண்ணா பல்கலைக் கழகத்தில் 23 வகையான சான்றிதழ்களைப் பெறுவதற்கும், அவற்றில் திருத்தம் செய்வதற்குமான கட்டணங்கள் 1000 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருக்கின்றன. கல்விக்கான சான்றிதழ்களின் கட்டணத்தை இந்த அளவுக்கு உயர்த்துவது கந்துவட்டி வணிகத்திற்கு ஒப்பானது, கண்டிக்கத்தக்கது.

அண்ணா பல்கலைக் கழகத்தில் மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்து விட்டாலோ, சேதமடைந்து விட்டாலோ அதற்கு பதிலாக புதிய சான்றிதழ் வாங்குவதற்கு இதுவரை ரூ.300 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது அந்தக் கட்டணம் 10 மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. பிற சான்றிதழ்களின் கட்டணங்களும் குறைந்தது 66 சதவீதம் முதல் 400 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.

மதிப்பெண் சான்றிதழ்களில் மதிப்பெண்களோ, பெயர் விவரங்களோ தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால், அதை திருத்தி புதிய சான்றிதழ் வாங்குவதற்கான கட்டணம் ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மதிப்பெண் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால் அது தேர்வுத்துறையின் தவறு தான். தேர்வுத் துறையின் தவறை திருத்தி வழங்க வேண்டியது அதன் கடமை. அதற்காக ரூ.1000 கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்?

அண்ணா பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள், ஏதேனும் நிறுவனங்களில் பணிக்கு சேரும் போது, அவர்களின் சான்றிதழ் உண்மையானது தானா? என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அண்ணா பல்கலைக் கழகத்தின் மூலம் ஆய்வு செய்து உறுதிப்படுத்திக் கொள்ளும். அண்ணா பல்கலைக்கழகம் வழங்கிய சான்றிதழ்கள் உண்மையா என்பதை சரி பார்த்து சொல்ல வேண்டியது பல்கலைக்கழகத்தின் பணி. அதற்கான கட்டணத்தை ரூ.2000 ஆக உயர்த்தியிருப்பது அநீதி.

சான்றிதழ் கட்டண உயர்வு மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்பதால், அதை அண்ணா பல்கலைக் கழகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதுகுறித்து பல்கலைக்கு அரசும் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News