செய்திகள்
எல் முருகன்

புதுவையை போல் தமிழகத்திலும் திமுக, காங்கிரசை அவர்கள் கட்சியினருக்கே பிடிக்கவில்லை- முருகன்

Published On 2021-02-22 06:35 GMT   |   Update On 2021-02-22 06:35 GMT
புதுவையை போல் தமிழகத்திலும் திமுக, காங்கிரசை அவர்கள் கட்சியினருக்கே பிடிக்கவில்லை என்று தமிழக பா.ஜனதா தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை:

புதுவை அரசியலில் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ. பதவி விலகியது காங்கிரஸ்- தி.மு.க. ஆட்சிக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்த நெருக்கடிக்கு பா.ஜனதாதான் காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி இருக்கிறது. இது தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் கூறியதாவது:-

தவறை தான் செய்து விட்டு பழியை மற்றவர்கள் மீது சுமத்துவது காங்கிரசுக்கு வாடிக்கைதான். அந்த வகையில் புதுவை முதல்-மந்திரி நாராயணசாமியும் கூறி இருக்கிறார்.

அந்த மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு. அவர்கள் ஆட்சியில் மக்களுக்கு நல்லது செய்திருக்க வேண்டும். கவர்னரை குறை சொல்லியே ஆட்சி நடத்தினார். எத்தனை நாளைக்கு அது எடுபடும்? அவருக்கு ஆட்சி செய்ய தெரியவில்லை.

கவர்னர் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு அவரது வேலையை செய்பவர். அதில் யாரும் தலையிட முடியாது. அதனால்தான் புதுவையில் நடந்த ஆட்சி அவர்களது சொந்த கட்சியினருக்கே பிடிக்காமல் ராஜினாமா செய்து இருக்கிறார்கள்.

கூட்டணி கட்சியான தி.மு.க.வும் காங்கிரஸ் ஆட்சிக்கு துணை நிற்கவில்லை. தி.மு.க. எம்.எல்.ஏ.வும் ராஜினாமா செய்து இருக்கிறார்.

தி.மு.க.வின் நிலைப்பாடும் சரியில்லை. இந்து விரோத, தேசவிரோத கட்சியாக செயல்படுகிறது. எனவேதான் அந்த கட்சியினருக்கும் பிடிக்கவில்லை. ராஜினாமா செய்து இருக்கிறார்கள்.

புதுவையில் மட்டுமல்ல. தமிழகத்திலும் இதே நிலையில்தான் அந்த கட்சியினரும் இருக்கிறார்கள். மக்களும் நினைக்கிறார்கள்.

தமிழக தேர்தலிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மக்களுக்கு பிடிக்கவில்லை. இதற்கான பதிலை தேர்தல் மூலம் தெரிவிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News