செய்திகள்
மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் பூஸ்டர்.

மீனவர்கள் வலையில் சிக்கிய பி.எஸ்.எல்.வி. ராக்கெட் பூஸ்டர் - வெடிக்கும் பொருள் இருந்ததால் பரபரப்பு

Published On 2019-12-03 07:43 GMT   |   Update On 2019-12-03 12:16 GMT
புதுவை கடலில் மீனவர்கள் வலையில் சிக்கிய பி.எஸ்.எல்.வி. ராக்கெட் பூஸ்டரில் வெடிக்கும் பொருள் இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுவை வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் படகில் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

புதுவை கடல் பகுதியில் இருந்து 10 நாட்டிக்கல் மைல் தூரத்தில் அவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது ராட்சத இரும்பு பொருள் ஒன்று அவர்களது வலையில் சிக்கியது. உருளை வடிவத்தில் நீளமாக இருந்தது. பக்கத்தில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த மற்ற மீனவர்கள் உதவியுடன் 4 படகுகளில் கட்டி அந்த பொருளை கரைக்கு கொண்டு வந்தனர்.

வம்பாகீரப்பாளையம் லைட் ஹவுஸ் அருகே அதை இழுத்து வந்து கடற்கரை மணலில் போட்டார்கள். பின்னர் இதுபற்றி ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் சென்று பார்த்த போது அது செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பும் ராக்கெட்டின் பாகம் என்று தெரிய வந்தது.

புதுவை அறிவியல் மைய அதிகாரிகள் சென்று பார்த்தார்கள். ராக்கெட்டில் எப்.எல். 119 மற்றும் பி.எஸ்.எம்.ஓ.- எக்ஸ்.எல். என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் 23.2.2019 என்ற தேதியும் எழுதப்பட்டு இருந்தது. இந்த சாதனம் 13.5 மீட்டர் நீளமும், சுமார் ஒரு மீட்டர் குறுக்களவும் கொண்டதாகவும் இருந்தது.

இதை ஆய்வு செய்த அறிவியல் மைய அதிகாரிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்படும் ராக்கெட்டின் பூஸ்டர் என்று கூறினார்கள்.

ராக்கெட் விண்ணில் ஏவப்படும் போது, அதை மேலே உந்தி தள்ளுவதற்காக 6 பூஸ்டர்கள் ராக்கெட்டின் அடிப்பாகத்தில் பொறுத்தப்பட்டு இருக்கும். அவை ஒவ்வொன்றாக எரிந்து சக்தியை வெளிப் படுத்தி ராக்கெட்டை மேலே கொண்டு செல்லும்.

ஒவ்வொரு பூஸ்டரும் எரிந்து முடிந்ததும் அதன் பாகங்கள் கீழே விழும். அவை கடலில் விழும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும்.

அதில் முதல் கட்டமாக எரிந்து கீழே விழுந்த பூஸ்டர் தான் இங்கு கிடைத்துள்ளது என்று அதிகாரிகள் கூறினார்கள்.

ராக்கெட் பாகம் கிடைத்த தகவல் குறித்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று காலை இணை இயக்குனர் அந்தஸ்து கொண்ட அதிகாரி தலைமையில் 4 பேர் புதுவைக்கு வந்தனர்.

பாகத்தை எடுத்து செல்வதற்காக 16 டயர்கள் கொண்ட ராட்சத லாரி ஒன்றும் வந்தது. பாகத்தை லாரியில் ஏற்றுவதற்காக கிரேனும் வரவழைக்கப்பட்டது.

அதிகாரிகள் ராக்கெட் பாகத்தை ஆய்வு செய்தனர். அதன் பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

இப்போது இங்கு கிடைத்திருப்பது கடந்த 27-ந் தேதி விண்ணில் ஏவப்பட்ட காட்ரோசாட் செயற்கை கோளுக்கான பி.எஸ்.வி.எல்.வி. ராக்கெட்டின் பூஸ்டர் பாகம் ஆகும்.

இந்த சாதனத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டு அதன் மூலம் ராக்கெட் புறப்படும் போது உந்து சக்தி அளிக்கப்படும். அது எரிந்து முடிந்ததும் தானாக கடலில் விழும்.

அதாவது ராக்கெட் புறப்பட்ட 49-வது வினாடியில் அது எரிந்து முடிந்து கீழே விழுந்து விடும். அது, எந்த இடத்தில்விழும் என்பதையும் நாங்கள் கணித்து இருந்தோம். எனவே, அந்த இடத்தில் கப்பல்கள், மீனவர்கள் படகுகள் வந்து விடாமல் பார்த்துக்கொள்ளும்படி கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்து இருந்தோம்.

பொதுவாக இந்த சாதனம் எரிந்து முடிந்து கீழே விழுந்ததும் கடலில் மூழ்கி விடும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

ஆனால், இது கடலில் விழும்போது உடைந்து சேதம் அடைந்து இருக்கிறது. இதனால் தான் கடலில் மூழ்காமல் மிதந்தபடி இருந்து இருக்கிறது. எனவே, இது மீனவர்கள் வலையில் சிக்கி உள்ளது.

இந்த பாகத்தால் இனி எந்த பயனும் இல்லை. இது, இரும்பு கடைகளுக்கு மறு சுழற்சிக்குதான் வழங் கப்படும்.

ஆனாலும், இதன் முன் பகுதியிலும், பின் பகுதியிலும் திட எரிபொருள் நிரப்பப்பட்ட வளையம் பொருத்தப்பட்டு இருக்கும். 1½ மீட்டர் வரை அகலம் கொண்ட இந்த வளையம் வெடிக்கும் திறன் கொண்டது. எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். இல்லை என்றால் வெடித்து விடும்.

எனவே, ஆபத்து என்பதால் இங்கிருந்து எடுத்து சென்று விட வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் இங்கு வந்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஆனால், வெடிக்கும் தன்மை உடைய அந்த 2 சாதனங்களில் பின்பக்க வளையம் மட்டுமே அந்த பாகத்தில் உள்ளது. முன் பக்கம் இருந்த சாதனத்தை காணவில்லை. அதை யாரோ நேற்றே எடுத்து சென்று விட்டனர். அது எந்த நேரத்திலும் வெடித்து விடலாம் என்பதால் உடனடியாக கைப்பற்ற நடவடிக்கை எடுக்கும்படி போலீசாரிடம் இஸ்ரோ அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

எனவே, அந்த பகுதியில் மைக் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. வெடிக்கும் தன்மை உடைய அந்த பொருளை யாரும் வைத்திருக்க வேண்டாம். அது, பெரிய ஆபத்தாகி விடும். எனவே, உடனடியாக கொண்டு வாருங்கள் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனாலும், நீண்ட நேரமாக அதை யாரும் எடுத்து வரவில்லை.

இதற்கிடையே ராக்கெட் பாகத்தை லாரியில் ஏற்றுவதற்கு முயற்சித்தனர். ஆனால், அந்த பகுதி மீனவர்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் தலைமையில் அதை ஏற்றி செல்லக்கூடாது என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராக்கெட் பாகத்தை வலையில் கட்டி இழுத்து வந்ததால் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள தலா 4 வலைகள் சேதம் அடைந்துள்ளன. படகுகளும் சேதம் அடைந்து இருக்கின்றன. 30 மீனவர்களின் ஒரு நாள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, ரூ.20 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்காக ரூ.10 லட்சம் நஷ்டஈடு தர வேண்டும். அதுவரை இதை எடுத்து செல்லக்கூடாது என்று கூறினார்கள். இதனால் ராக்கெட் பாகத்தை ஏற்று வது நிறுத்தப்பட்டது.

வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுபன் சந்திரபோஸ், கடலோர பாதுகாப்பு சூப்பிரண்டு பாலச்சந்திரன் மற்றும் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதனால் மதியம் வரை ராக்கெட் பாகம் எடுத்து செல்லப்படாமல் கடற்கரையிலேயே கிடந்தது.

வெடிக்கும் தன்மை உடைய பாகத்தை யாரோ எடுத்து சென்று இருப்பதால் அது வெடித்து ஆபத்து ஏற்பட்டு விடுமோ? என்ற பதட்டம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே, அந்த பாகத்தை யார் எடுத்து சென்றது என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

ராக்கெட் பாகம் கடற்கரையில் கிடக்கும் தகவல் அறிந்து ஏராளமானோர் அதை பார்வையிடுவதற்காக அந்த பகுதிக்கு வந்தனர். இதனால் ஒரே கூட்டமாக காணப்பட்டது. பலர் ராக்கெட் பாகம் முன்பு நின்று செல்பி எடுத்துக்கொண்டனர்.

Tags:    

Similar News