ஆன்மிகம்
ஒரே கூரையின் கீழ் மும்மத தெய்வங்கள்

ஒரே கூரையின் கீழ் மும்மத தெய்வங்கள்

Published On 2020-11-05 06:05 GMT   |   Update On 2020-11-05 06:05 GMT
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய வளாகத்தில் ஒரே கூரையின் கீழ் மூன்று மத வழிபாட்டுத் தலங்களும் உள்ளதை படத்தில் காணலாம்.
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய வளாகத்தில் ஒரே கூரையின் கீழ் மூன்று மத வழிபாட்டுத் தலங்களும் உள்ளதை படத்தில் காணலாம்.

எம்மதமும் சம்மதம் எனக்குறிக்கும் வகையில் வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளிட்டவைகளில் இந்து தெய்வம், கிறிஸ்தவ கடவுள் மற்றும் முஸ்லிம்களுக்கான மசூதியை ஒரே புகைப்படத்தில் உருவாக்கி மாட்டி வைத்திருப்பார்கள். அது தெய்வங்களுக்குள் மட்டுமல்லாது மனிதர்களுக்குள்ளும் எவ்வித பாகுபாடு பார்க்கப்படவில்லை என்பதற்கான அர்த்தம். இதுபோல் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரே கூரையின் கீழ் மும்மத தெய்வங்களின் கோவில் அமைக்கப்பட்டு இப்போதும் அனைவராலும் மகிழ்ச்சியாக வழிபட்டு செல்லும் இடம் திருச்சி ஜங்ஷனில் உள்ளது. ஆம்...அது ரெயில் என்ஜின் டிரைவர்களால் உருவாக்கப்பட்டதாகும்.

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் இடது புறமாக ஓடும் தொழிலாளர்கள் கண்காணிப்பாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கிருந்துதான் ரெயில் என்ஜின் டிரைவர்கள் தங்கள் பணிகளுக்கு புறப்பட்டு செல்கிறார்கள். ரெயில் என்ஜின் டிரைவர்கள் ஏற்பாட்டால் பல ஆண்டுகளுக்கு முன்பு முதலில் விநாயகர் சிலை வைத்து ரெயில் விநாயகர் என வழிபாடு தொடங்கியது. என்ஜின் டிரைவர்கள் இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என மும்மதங்களை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள். மதத்தால் வேறுபட்டாலும் பணி நிமித்தமாக அவர்கள் ஒன்றுபட்ட உழைப்பாளர்கள்.

ஒரே கூரையின்கீழ் 3 தெய்வங்கள்

ஆயிரக்கணக்கான பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் என்ஜின் டிரைவர்கள், அவர்களை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் கொண்டு செல்லும் கடமை அவர்களுக்கும் உள்ளது. எனவே, தங்களுக்கான தெய்வங்களை வழிபட்டு விட்டு பணிக்கு செல்வதை வழக்கமாக கொள்ளும் வகையில் ஒரே கூரையின்கீழ் 3 தெய்வங்களுக்கான கோவில் உருவாக்கப்பட்டது.

முதலில் ரெயில் விநாயகர் சாமி கோவில். அதற்கு வலது புறமாக தூய ஆரோக்கிய அன்னை சொரூபத்துடன் அமைந்த சிறிய ஆலயம், இடது புறமாக முஸ்லிம்கள் வணங்கும் நபிகள் நாயகம் நினைவாக உருவாக்கப்பட்ட வழிபாட்டு தலம். மும்மத தெய்வங்களும் அமைந்துள்ள கூரையின் மேல் அத்தெய்வங்களை அடையாளம் காணும் வகையிலான குறியீடும் உள்ளது.

இது குறித்து ஓய்வு பெற்ற ரெயில் என்ஜின் டிரைவர் பாபு கூறியதாவது:-

மகிழ்ச்சியான கலந்துரையாடல்

நான் ரெயில்வே பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் என்னுடன் பணியாற்றிய சக நண்பர்களுடன் கலந்துரையாடும் இடமாக மும்மத தெய்வங்கள் குடிகொண்ட இடம் அமைந்துள்ளது. ரெயில் விநாயகர் கோவிலை நிர்வகிப்பவராக பத்மநாபன் உள்ளார். இங்கு செவ்வாய், வெள்ளிக்கிழமை தோறும் பூஜைகள் நடப்பதுண்டு. மேலும் விநாயகர் சதுர்த்தி மற்றும் ஆயுத பூஜை தினத்தில் இங்கு சிறப்பாக நிகழ்ச்சி நடைபெறும்.

தூய ஆரோக்கிய அன்னை கெபி ஆலயம் ஜான்பிரிட்டோ கண்காணிப்பில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தோறும் திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடப்பது வழக்கம். மேலும் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகை, ஈஸ்டர் பண்டிகை உள்ளிட்ட நாட்களில் திருப்பலிகள் நடக்கும். அடுத்து நபிகள் நாயகம் நினைவாக அமைந்துள்ள இடத்தில் வெள்ளிக்கிழமை தோறும் தொழுகை நடப்பது வழக்கம். மேலும் பக்ரீத், ரம்ஜான் நாட்களில் சிறப்பு தொழுகை நடக்கும். ரெயில்வேயில் லோகோ பைலட்டுகளாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்தான் இதை முன்நின்று நடத்தி வருகிறோம். தினமும் இங்கு வந்து சிறிது நேரம் சாமி தரிசனம் செய்து விட்டு குடும்ப உறவுகள் குறித்து மகிழ்ச்சியாக கலந்துரையாடி விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News