செய்திகள்
கல்லூரி மாணவிகள்

மாதவிடாய் காலத்தில் கோவிலுக்கு சென்றதாக புகார்- 68 மாணவிகளிடம் சோதனை

Published On 2020-02-15 08:29 GMT   |   Update On 2020-02-15 08:29 GMT
குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் கல்லூரி விடுதியில் தங்கி இருக்கும் மாணவிகள் மாதவிடாய் காலத்தில் கோவிலுக்கு சென்றதாக வந்த புகாரையடுத்து, 68 மாணவிகளிடம் நிர்வாகத்தினர் சோதனை நடத்தி உள்ளனர்.
அகமதாபாத்:

குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் ஸ்ரீசஹ்ஜானந்த் பெண்கள் இன்ஸ்ட்டியூட் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள்.

கல்லூரி கட்டுப்பாட்டில் விடுதி ஒன்றும் இயங்கி வருகிறது. தொலைதூரத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவிகள் இந்த விடுதியில் தங்கி உள்ளனர்.

இம்மாணவிகள் தங்களது மாதவிடாய் காலத்தில் சக மாணவிகளுடன் அமர்ந்து உணவு உண்பதும், பழகுவதும் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மாணவிகள் சிலர் கட்டுப்பாட்டை மீறி விடுதி சமையலறைக்குள் செல்வதாகவும், கல்லூரி வளாகத்தில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவதாகவும் விடுதி காப்பாளருக்கு புகார் சென்றுள்ளது. அவர் இது குறித்து கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து விசாரணையில் இறங்கிய கல்லூரி நிர்வாகம், விடுதியில் தங்கி இருந்த 68 மாணவிகளை கழிவறைக்கு வரிசையாக அழைத்துச் சென்று அவர்களது உள்ளாடைகளை களையச்செய்து சோதனை நடத்தி உள்ளனர்.

இந்த விவகாரம் அம்பலமாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து கல்லூரியின் பொறுப்பு துணைவேந்தர் ஒருவர் விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளார்.

இது தொடர்பாக போலீசாரும் விசாரணையில் இறங்கி உள்ளனர். பெண் இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினர் கல்லூரி விடுதி மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட குஜராத் மாநில மகளிர் ஆணையம், போலீசாரிடம் இருந்து விரிவான அறிக்கையை கேட்டுள்ளதாக ஆணைய தலைவர் லீலா அங்கோலியா தெரிவித்தார்.
Tags:    

Similar News