செய்திகள்
முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது எப்படி?- நாராயணசாமி தலைமையில் ஆலோசனை

Published On 2020-10-16 06:52 GMT   |   Update On 2020-10-16 06:52 GMT
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
புதுச்சேரி:

புதுச்சேரி தலைமை செயலகத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில் பேரிடர் மேலாண்மை குழு சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது எப்படி? என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில பேரிடர் மேலாண்மைக்குழு தலைவரும், முதல்-அமைச்சருமான நாராயணசாமி தலைமை தாங்கினார்.

இதில் அமைச்சர்கள் நமச் சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான் மற்றும் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், மாவட்ட கலெக்டர் அருண் உள்பட அனைத்து துறை செயலர்கள் மற்றும் வருவாய், பொதுப்பணி, உள்ளாட்சி, மின்சாரம், காவல், தீயணைப்பு, கடலோர காவல்படை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

26-ந் தேதி முதல் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அதனை எதிர்கொள்வது குறித்து புதுவையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பொதுமக்களுக்கு தேவையான இருப்பிடம், உணவு, மருந்து, குடிநீர், மின்சாரம் ஆகிய அடிப்படை வசதிகள் கிடைக்க ஆலோசிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றவும், தேங்கிய மழைநீரை மோட்டார்கள் மூலமாக அகற்றவும், குடிநீர், மின்சாரம் தடைபட்டால் 24 மணி நேரத்தில் சரி செய்யவும் உத்தரவிடப்பட்டது.

அனைத்து துறைகளின் தொலைபேசி எண்களும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவும், துறைவாரியாக கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழைக்காலத்தில் பரவும் டெங்கு, காலராவை தடுக்க மருந்துகள், தடுப்பூசிகளை இருப்பு வைக்க அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அனைத்து பகுதியிலும் கிருமிநாசினி தெளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்வதை தடுக்க அவர்களது செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலோர காவல்படை, காவல்துறையினர் உஷார் நிலையில் வைக்கப்பட உள்ளனர். இந்த பணிகளை கண்காணிக்க 3 அரசு செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த பணியில் நான், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் களத்தில் இறங்கி வேலை செய்ய தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் திட்ட மறுஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், நிதித்துறை செயலாளர் சுர்பீர் சிங் மற்றும் அரசுத்துறை செயலாளர்கள், இயக்குனர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Tags:    

Similar News