செய்திகள்
எமரால்டு அணையை படத்தில் காணலாம்.

கோடைக்காலத்திலும் மின்உற்பத்தி பாதிக்காது- அதிகாரிகள் தகவல்

Published On 2021-01-22 09:50 GMT   |   Update On 2021-01-22 09:50 GMT
நீலகிரியில் தொடர்மழையால் அணைகள் நிரம்பியதால் கோடைக்காலத்திலும் மின்உற்பத்தி பாதிக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மஞ்சூர்:

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 13 நீர்மின் நிலையங்கள் உள்ளன. அதாவது அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, போர்த்திமந்து உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அணைகளில் தண்ணீர் தேக்கி வைக்கப்படும். பின்னர் இந்த தண்ணீரின் மூலம் நீர் மின்நிலையங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் மொத்த மின்உற்பத்தியில் 10 சதவீதம் மின்சார உற்பத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின்நிலைங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து போதிய மழை பெய்யாததாதல் அணைகளில் நீர்வரத்து மிகவும் குறைவாக காணப்பட்டது. பெரும்பாலான அணைகளில் இருப்பில் உள்ள நீரை கொண்டே மின்நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும் மின்உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது.

ஆனால் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் நடப்பு ஜனவரி மாதம் வரை பருவ மழை தொடங்கியதையடுத்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியது. இந்த மழையால் மாவட்டம் முழுவதும் உள்ள ஆறுகள், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் தேக்கங்கள் அனைத்தும் நிரம்பியது. குறிப்பாக மின்சார உற்பத்திக்கு முக்கிய ஆதாரமாக உள்ள அணைகள் அனைத்திலும் நீர்மட்டம் உயர்ந்தது.

இந்த நிலையில் 175 அடி உயரம் கொண்ட எமரால்டு அணைக்கு உட்பட்ட போர்த்தி அணை அதன் எல்லைப் பகுதியான போர்த்தி ஆடா வரை வெள்ளம் நிரம்பி முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அணையை ரசித்து செல்கின்றனர். குந்தா மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், தற்போது அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், நீர்மின்நிலையங்களில் கோடைக்காலத்திலும் மின்உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்படாது என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News