உள்ளூர் செய்திகள்
தந்தை மற்றும் கணவருடன் தர்ணாவில் ஈடுபட்ட ராஜேஸ்வரி.

சொத்தை அபகரிக்க முயலும் அண்ணன் மீது நடவடிக்கை - தந்தை, கணவருடன் மாற்றுத்திறனாளி பெண் தர்ணா

Published On 2021-12-02 10:52 GMT   |   Update On 2021-12-02 10:52 GMT
அடியாட்களை கொண்டு மிரட்டி வருவதோடு மட்டுமல்லாமல் ஜாதிப் பெயரைச் சொல்லி அசிங்கமாக திட்டியுள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த எல்லீஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவரது மனைவி நல்லம்மாள். இவர்களுக்கு செல்வராஜ் என்ற மகனும், ராஜேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இதில் ராஜேஸ்வரிக்கு வாய் பேச முடியாது, காதும் கேட்காது. நாச்சிமுத்து தனது மகன் மற்றும் மகளுக்கு திருமணம் செய்து வைத்து தனது சொத்தை இருவருக்கும் பிரித்துக் கொடுத்துள்ளார். 

மேலும் தான் சொந்த உழைப்பில் சம்பாதித்த, தாராபுரம் அடுத்த தளவாய்பட்டிணம் கிராமத்தில் உள்ள 11.44 ஏக்கர் நிலத்தை மகளின் பெயரில் கிரையம் செய்து கொடுத்துள்ளார். இதனிடையே கடந்த சில மாதங்களாக செல்வராஜ் மற்றும் அவரது மனைவி தங்கைக்கு கொடுத்த நிலத்தில் பங்கு கேட்டு கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். 

மேலும் அங்கு அவர்களை  விவசாயம் செய்ய விடாமல் தடுத்தும் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து ராஜேஸ்வரி தரப்பில் தாராபுரம் போலீசில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

மேலும் அடியாட்களை கொண்டு மிரட்டி வருவதோடு மட்டுமல்லாமல் ஜாதிப் பெயரைச் சொல்லி அசிங்கமாக திட்டியுள்ளனர். இதனால் நாங்கள் உயிர் பயத்தோடு வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எங்களது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் .

மேலும் எங்களது சொத்தை மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். எங்கள் குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாச்சிமுத்து மகள் மற்றும் மருமகன் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News