செய்திகள்
கோப்பு படம்.

தாராபுரத்தில் லேத் பட்டறை உரிமையாளர் வீட்டில் 18 பவுன் நகை திருட்டு

Published On 2020-11-30 15:09 GMT   |   Update On 2020-11-30 15:09 GMT
தாராபுரத்தில் லேத் பட்டறை உரிமையாளரின் வீட்டு கதவின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
தாராபுரம்:

தாராபுரத்தில் லேத் பட்டறை உரிமையாளரின் வீட்டு கதவின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் என்.ஜி.ஜி.ஓ.காலனியை சேர்ந்தவர் வீரமணி (வயது 43). இவர் பூளவாடி சாலையில் 25 ஆண்டு காலமாக லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு யமுனா (30) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது குடும்பத்துடன் வீரமணி கோவையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு கடந்த 27-ந் தேதி சென்றார்.

இந்த நிலையில் நேற்று மதியம் வீரமணி தனது குடும்பத்துடன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க இரும்பு கேட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வீரமணி உடனே வீட்டிற்குள் சென்றார். அங்கு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளே பொருட்கள் சிதறிக்கிடந்தன.

அத்துடன் வீட்டின் அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 18 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.20 ஆயிரம் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து தாராபுரம் போலீசாருக்கு வீரமணி தகவல் கொடுத்தார். அதன்பேரில் தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்தனர். போலீசார் வீட்டை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர்.

லேத் பட்டறை உரிமையாளர் வீரமணி வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டிற்குள் புகுந்து இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News