செய்திகள்
பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேசிய போது எடுத்தபடம். அருகில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளார்.

காங்கிரசும், திமுகவும் தமிழகத்தின் எதிரிகள்- சிடி ரவி பேச்சு

Published On 2021-04-03 22:21 GMT   |   Update On 2021-04-03 22:21 GMT
தி.மு.க. ஆட்சியில் தினமும் 17 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்று பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி. பேசியுள்ளார்.
தேனி:

போடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து, பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி நேற்று போடியில் பிரசாரம் செய்தார். இதையடுத்து போடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் சி.டி.ரவி கலந்துகொண்டு பேசியதாவது:-

ஓ.பன்னீர்செல்வம் போன்ற ஒரு தலைவரை நீங்கள் பார்த்து இருக்க முடியாது. அவர் மிகவும் பண்புள்ள தலைவர்.

தமிழ்நாட்டுக்கு யார் நண்பன்? யார் எதிரி? என்று தெரிந்து கொள்ள வேண்டும். அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. த.மா.கா. ஆகிய கட்சிகள் தமிழகத்துக்கு நண்பர்கள். காங்கிரசும், தி.மு.க.வும் தமிழகத்தின் எதிரிகள். நம்முடைய அரசியலுக்கு மட்டும் இல்லை, நம்முடைய கடவுள் முருகனுக்கும் அவர்கள் எதிரிகள்.

பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி இயற்கையான கூட்டணி. ஜனநாயக கூட்டணி. தி.மு.க., காங்கிரஸ் இடையே இருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி. தமிழகத்துக்கு கட்டப்பஞ்சாயத்தும் வேண்டாம், தி.மு.க.வும் வேண்டாம். காங்கிரஸ் கட்சியும் வேண்டாம். 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் தினமும் 17 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அந்த ஆட்சி உங்களுக்கு வேண்டுமா? ஒருமுறை தி.மு.க. அதிகாரத்துக்கு வந்தால், உங்கள் அதிகாரம் பறிபோகும்.

ஜல்லிக்கட்டு ஹீரோ ஓ.பன்னீர்செல்வம் தான். காங்கிரஸ், தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது தான் ஜல்லிக்கட்டுக்கு தடை கொண்டு வரப்பட்டது. மோடியும், ஓ.பன்னீர்செல்வமும் அந்த தடையை விலக்கி மீண்டும் ஜல்லிக்கட்டை கொண்டு வந்தார்கள்.

ஜெயலலிதா, மோடிக்கு இடையிலான உறவு அக்காள், தம்பி உறவு. அந்த உறவு பலப்பட வேண்டும். அவர்களின் கனவு நிறைவேற வேண்டும் என்றால், அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்கள் ஜெயிக்க வேண்டும். தாம்பூலத்தட்டில் பூ, இலை, பழம் இருக்கும். அந்த பூ தான் தாமரை. அந்த இலை தான் இரட்டை இலை. அந்த பழம் தான் மாம்பழம். இந்த தொகுதியில் மோடியின் சின்னம் இரட்டை இலை. உங்களுக்கு கடவுள் பக்திக்கு எதிரான அரசு வேண்டுமா? கடவுள் பக்தியுள்ள அரசு வேண்டுமா? என்று முடிவு செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரசாரத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாண்டியன் மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News