உள்ளூர் செய்திகள்
திருஉத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவில்

தேரோட்டம்

Published On 2022-04-16 09:38 GMT   |   Update On 2022-04-16 09:38 GMT
திருஉத்தரகோசமங்கையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது.
ராமநாதபுரம்

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு சொந்தமான திருஉத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவிலில் 100 ஆண்டுகளுக்குப்பிறகு இன்றுமாலை தேரோட்டம் நடைபெறுகிறது.

கடந்த 8ந்தேதி இந்த கோவிலில் சித்திரைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நூறாண்டுகளுக்கு முன்பு சித்திரைத் திருவிழாவில் பெரிய தேர் மற்றும் 4 சட்டத்தேர்கள் மூலம் சுவாமி வீதிஉலா நடந்தது. 

தீ விபத்தில் தேர் எரிந்ததை அடுத்து தேரோட்டம் நடைபெறவில்லை. தற்போது பெங்களூருவைச் சேர்ந்த ஆன்மிக அறக் கட்டளையினர் சுமார் ரூ.60லட்சம் செலவில் இலுப்பை மரத்தினால் தேரை வடிவமைத்துள்ளனர். 4சக்கரங்களுடன் 16அடி உயரம், 26அடி அகலம் உடைய தேரில் மங்களநாதசுவாமி தலவரலாற்று அடிப்படையில் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

தேரின் மேல்புறத்தில் சட்டங்கள் கோபுரம்போல அமைத்து கலசம் வைக்கப்படும். பின்னர் அசைந்தாடிகளும், குதிரை மரச்சிற்பங்களும் பொறுத்தப்படும். தேரின் அலங்காரம் உள்ளிட்ட மொத்த உயரம் 41 அடியாக இருக்கும். 

சுவாமி, அம்பாளுக்கு நேற்று மாலையில் திருக்கல்யாணம் நடந்தது. போகலூரைச் சேர்ந்த முகுந்த வம்சத்தை சேர்ந்தவர்கள் அம்பாளை தாரைவார்க்க திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இன்று காலையில் மங்கை பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பெரிய கண்மாயில் உள்ள கோவிந்தன் கோவிலில் எழுந்தருளினார். 

இன்று மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. தேரை அந்தப்பகுதியைச் சேர்ந்த கிராமத்தினர் அனைவரும் இழுத்துச் செல்ல உள்ளனர். தேரடியிலிருந்து யாதவர்தெரு, காவல் நிலையப்பகுதி, வடக்கு பகுதி என மீண்டும் தேரடியை தேர் அடையும். 

இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகத்தா ராணி ராஜேஸ்வரி நாச்சியார் ஆலோசனையின் பேரில் கோவில் திவான் பழனிவேல்பாண்டியன் செய்து வருகிறார்.
Tags:    

Similar News