ஆன்மிகம்
ராமேசுவரம் கோவில்

ராமேசுவரம் கோவில் தீர்த்த கிணறுகள் எப்போது திறப்பு?

Published On 2020-12-14 04:21 GMT   |   Update On 2020-12-14 04:21 GMT
ராமேசுவரம் கோவிலில் தீர்த்த கிணறுகள் எப்போது திறக்கப்படும்? என்பது குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதுமுள்ள கடற்கரை பகுதிகளில் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் செல்ல அரசால் தடை விதிக்கப்பட்டது. இதேபோல் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடவும், திதி தர்ப்பண பூஜைகளை செய்யவும் தடைவிதிக்கப்பட்டதோடு, தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை மற்றும் சாலைப்பகுதி, உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் கடற்கரை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

கடந்த 9 மாதத்திற்கு மேலாகவே சுற்றுலா பயணிகள் யாரும் கடற்கரை பகுதிகளுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. அதுபோல் நாளை (திங்கட்கிழமை) முதல் சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் அனுமதிக்கப்படுவர் என்று தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் நீராட மற்றும் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை மற்றும் உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் கடற்கரை பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுவார்களா-இல்லையா? என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை மூலமாகவோ எந்த ஒரு அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை.

எனவே நாளை(திங்கட்கிழமை) முதல் வழக்கம் போல் ராமேசுவரம், தனுஷ்கோடி அரியமான் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று வாகன ஓட்டுனர்களும், வியாபாரிகளும், தங்கும் விடுதி உரிமையாளர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ராமேசுவரம் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளை திறக்க வேண்டும் என்று அதை நம்பி வாழும் யாத்திரை பணியாளர்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். தமிழக அரசுக்கு இந்த மனுவை அனுப்பி பரிந்துரை செய்துள்ளேன். எந்நேரமும் இதுகுறித்து அரசின் மூலம் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்ப்பு உள்ளது.

அரசு அனுமதி உத்தரவு வழங்கிய உடன் ராமேசுவரம் கோவிலில் தீர்த்த கிணறுகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கும், சுற்றுலா வருவோர் தனுஷ்கோடிக்கும் அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News