ஆன்மிகம்
சிவாலய ஓட்டம்

சிவாலய ஓட்டம்: கோவிலும்.. தூரமும்..

Published On 2021-03-11 08:50 GMT   |   Update On 2021-03-11 08:50 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை, மகா சிவராத்திரி அன்று காலை முதல் சிவராத்திரி இரவு மற்றும் மறுநாள் அதிகாலை வரை ஓடிச்சென்று வழிபடுவதே ‘சிவாலய ஓட்டம்’ ஆகும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள ‘சிவாலய ஓட்டம்’ மிகவும் பிரசித்திப்பெற்றது. அங்குள்ள 12 சிவாலயங்களை, மகா சிவராத்திரி அன்று காலை முதல் சிவராத்திரி இரவு மற்றும் மறுநாள் அதிகாலை வரை ஓடிச்சென்று வழிபடுவதே ‘சிவாலய ஓட்டம்’ ஆகும். இந்த ஓட்டமானது சுமார் 118 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கியது. சிவராத்திரி அன்று காலையில் காவி வேட்டியும், காவித்துண்டும் தரித்து, ருத்திராட்சம் அணிந்து, வெறுங்காலுடன் சிறிய பையில் விபூதி எடுத்துக்கொண்டு, பனை ஓலை விசிறியுடன் சிவாலய ஓட்டத்தை அடியவர்கள் தொடங்குவார்கள்.

சிவாலய ஓட்டத்தின் முதல் கோவிலான முஞ்சிறை திருமலை சூலபாணி மகாதேவர் திருக்கோவில், நாகர்கோவில் -திருவனந்தபுரம் சாலையில் உள்ள மார்த்தாண்டத்தில் இருந்து தேங்காய்பட்டணம் செல்லும் வழியில் 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு பக்தர்களின் சிவாலய ஓட்டத்திற்கு தேவையான விசிறி, திருநீற்று பைகள் கிடைக்கின்றன.

முஞ்சிறையில் இருந்து அடுத்த சிவாலயமான திக்குறிச்சி மகாதேவர் திருக்கோவில்,10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. திக்குறிச்சியில் இருந்து அடுத்த சிவாலயமான திற்பரப்பு வீரபத்திரர் மகாதேவர் திருக் கோவில், அருமனை எனும் ஊர் வழியாக 14 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. திற்பரப்பில் இருந்து அடுத்த சிவாலயமான திருநந்திக்கரை நந்திகேஸ்வரர் திருக்கோவில், குலசேகரம் சந்திப்பு வழியாக 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. திருநந்திக்கரையில் இருந்து அடுத்த சிவாலயமான பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் திருக்கோவில், 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

பொன்மனையில் இருந்து அடுத்த சிவாலயமான திருப்பன்னிப்பாகம் கிராதமூர்த்தி மகாதேவர் திருக்கோவில், குமாரபுரம், முட்டைக்காடு வழியாக 11 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. திருப்பன்னிப்பாகத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில், அடுத்த சிவாலயமான கல்குளம் என்னும் பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி திருக்கோவில் உள்ளது.

கல்குளத்தில் இருந்து அடுத்த சிவாலயமான மேலாங்கோடு காலகாலர் திருக்கோவில், 3 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. மேலாங்கோடு திருத்தலத்தில் இருந்து அடுத்த சிவாலயமான திருவிடைக்கோடு எனும் வில்லுக்குறி சடையப்பர் திருக்கோவில், 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. திருவிடைக்கோடு திருத்தலத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில், அடுத்த சிலவாயமான திருவிதாங்கோடு நீலகண்ட சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

திருவிதாங்கோடு திருத்தலத்தில் இருந்து கோழிப்போர் விளை, பள்ளியாடி வழியாக 6 கிலோமீட்டர் தூரம் சென்றால், அடுத்த சிவாலயமான திருப்பன்றிக்கோடு பக்தவச்சலர் திருக்கோவிலை அடையலாம். திருப் பன்றிக்கோடு திருத்தலத்தில் இருந்து கடைசி சிவாலயமான திருநட்டாலம் சங்கரநாராயணர் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
Tags:    

Similar News