செய்திகள்
அகமதாபாத் விமான நிலையம்

விமான நிறுவன ஊழியரை அறைந்த போலீஸ் அதிகாரி... அகமதாபாத் ஏர்போர்ட்டில் பரபரப்பு

Published On 2020-11-18 06:17 GMT   |   Update On 2020-11-18 06:17 GMT
விமானத்தில் ஏறுவதற்கான போர்டிங் பாஸ் கொடுக்க மறுத்த ஊழியரிடம் போலீஸ் அதிகாரி வாக்குவாதம் செய்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அகமதாபாத்:

அகமதாபாத்தில் இருந்து நேற்று டெல்லி புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணிப்பதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் விமான நிலையத்திற்கு வந்தனர். ஆனால் அவர்கள் தாமதமாக வந்ததால் விமானத்தில் ஏறுவதற்கான போர்டிங் பாஸ்கள் வழங்கப்படவில்லை. இதனால் டிக்கெட் கவுண்டரில்  உள்ள விமான நிறுவன ஊழியரிடம் அந்த போலீஸ் அதிகாரி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஊழியரின் கன்னத்தில் போலீஸ் அதிகாரி அறைந்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பும் பதற்றமும் உருவானது. இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, விமான நிலைய பாதுகாப்பு வீரர்கள், சிஐஎஸ்எப் வீரர்கள் வந்து இரு தரப்பினரையும் விலக்கிவிட்டனர். அத்துடன் மோதலில் ஈடுபட்ட பயணிகள் மற்றும் விமான நிறுவன ஊழியரை போலீசில் ஒப்படைத்தனர். 

அதன்பின்னர் இரு தரப்பினரும் சமாதானமாக செல்லும் முடிவுக்கு வந்தனர். புகார்களை வாபஸ் பெற்றனர். எனினும், சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 பயணிகளும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை.
Tags:    

Similar News