கோவில்கள்
பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில்

பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில் – நல்லூர்

Published On 2022-03-23 05:47 GMT   |   Update On 2022-03-23 05:47 GMT
முருகப் பெருமான் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராய் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.
தினமும் ஐந்து முறை நிறம் மாறும் சிவலிங்கம் !
ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசன்…!

உலகிலே அதிகமாக அனைத்து இடங்களிலும் சிவபெருமான் கோவில்கள் தான் இருக்கும். அவற்றில் ஒன்றுதான் இந்த நிறம் மாறும் சிவலிங்கம். இக்கோவில் இந்தியாவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசனாக பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையில் பாபநாசத்தை அடுத்த நல்லூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.

திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான இத்திருக்கோவிலில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக கல்யாண சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். கோவிலின் முன்புறம் ஏழு கடல் என்னும் பெரிய தீர்த்தம் உள்ளது.

மூலவர் – பஞ்சவர்ணேஸ்வரர் (கட்டு) மலைமீது உள்ளார். இங்குள்ள இறைவனின் சிவலிங்கத் திருமேனி வேறு எங்கும் காண முடியாத அற்புதமான அமைப்பை உடையது.

தினமும் இந்த கோவிலின் மூலவர் தாமிரம், இளஞ்சிவப்பு, தங்கம், மரகதப்பச்சை தவிர குறிப்பிட முடியாத நிறம் என்று ஐந்து நிறமாக காட்சியளிக்கிறார்.

காலை 6 மணி முதல் 8.24 வரை தாமிர நிறம், 8.25 முதல் 10.48 வரை இளஞ்சிவப்பு, பின் 10.49க்கு உருகிய தங்க நிறம், மாலை 3.36க்கு மரகதப்பச்சை நிறத்தில் இந்த லிங்கம் மாறுகிறது. பிறகு மாலை 6.00 மணிக்கு மேல் குறிப்பிட முடியாத நிறத்தில் காட்சியளிக்கிறது.

திருப்புகழ் தலம்:

இத்தலத்திலுள்ள முருகப் பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ளார். முருகப் பெருமான் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராய் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.

தல வரலாறு:

ஒருசமயம் ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்தது. ஆதிசேடன் கயிலையைத் தன் ஆயிரம் மகுடங்களாலும் இறுகப்பற்றிக் கொள்ள, வாயுதேவன் சண்டமாருதமாக மலையை அசைக்க முற்பட்டு பலத்த காற்றை வீசினார். இந்த இருவரின் போட்டியால் தேவர்கள் அஞ்சினர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ஆதிசேடன் தன்பிடியைச் சிறிது தளர்த்தினார். இது தான் தக்க சமயமென்றெண்ணி வாயு இரு சிகரங்களைப் பெயர்த்துக் கொண்டு வந்து தென்னாட்டில் ஒன்றை திருநல்லூரிலும், மற்றொன்றை அருகிலுள்ள ஆவூரிலும் விடுவித்தார். நல்லூரில் விழுந்த அம்மலைச் சிகரமே இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் எழுந்தருளியுள்ள மலையாகும். தென் கயிலாயம் என்று இத்தலமும் வழங்கப்படுகின்றது.

ஆலய முகவரி

அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்
திருநல்லூர் கிராமம்
திருநல்லூர் அஞ்சல்
(வழி) சுந்தரப்பெருமாள் கோயில்
வலங்கைமான் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN – 614208.
Tags:    

Similar News