ஆன்மிகம்
பார்கடலை கடந்த போது

சுயநலமின்றி இருந்தால் இறையருள் கிடைக்கும்

Published On 2021-01-05 07:33 GMT   |   Update On 2021-01-05 07:33 GMT
மனிதர்களும் கூட தங்களின் குணநலன்களைப் பொறுத்தே நல்லவர்கள், கெட்டவர்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. அதன்படியே அவர்களுக்கு பலன்களும் கிடைத்து வருகின்றன.
இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும், இறைவனாலேயே படைக்கப்பட்டதாக ஆன்மிகம் சொல்கிறது. அவற்றின் குணாதிசயங்களைப் பொறுத்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக பிரிக்கப்படுகின்றன. மனிதர்களும் கூட தங்களின் குணநலன்களைப் பொறுத்தே நல்லவர்கள், கெட்டவர்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. அதன்படியே அவர்களுக்கு பலன்களும் கிடைத்து வருகின்றன. தேவர்களைப் போன்று அனைத்து சக்தியோடும் படைக்கப்பட்டவர்களே அசுரர்கள். ஆனால் அவர்களின் குணநலன்களால் அவர்கள் இறைவனின் அருளைப் பெற முடியவில்லை. அதை அவர்கள் உணர்ந்துகொள்ளவும் இல்லை.

ஒரு முறை அசுரர்கள் அனைவரும் சேர்ந்து பிரம்மதேவரைச் சந்தித்தனர். “பிரம்மதேவா.. தேவர்களைப் போலவே, எங்களையும் நீங்கள் தான் படைத்தீர்கள். ஆனால், எங்களைச் சரிவர கவனிக்காமல், தேவர்களின் முன்னேற்றத்திலேயே கவனம் செலுத்துகிறீர்கள். இது பாரபட்சமானது இல் லையா?” என்றனர்.

பிரம்மா அவர்களிடம், “நான் எல்லாரையும் ஒன்று போல்தான் படைக்கிறேன். ஒருவரது முன்னேற்றம் என்பது அவரது முயற்சி, ஒற்றுமையைப் பொறுத்து தான் இருக்கிறது” என்றார்.

அசுரர்கள் அதை நம்ப மறுக்கவே, இதை நிரூபிப்பதாக பிரம்மதேவர் கூறினார். ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்த பிரம்மா, தேவர்களையும், அசுரர்களையும் வரவழைத்தார். பெரிய பெரிய லட்டுகள் தயாராக இருந்தன. அசுரர்களை அழைத்து, “நீங்கள் எல்லாரும் இந்த லட்டைச் சாப்பிடலாம். ஆனால், முழங்கையை மடக்காமல் சாப்பிட வேண்டும்” என்று நிபந்தனை விதித்தார்.

அசுரர்கள் எவ்வளவோ முயற்சித்தும், கையை மடக்காமல் சாப்பிட முடியவில்லை. லட்டுகள் அனைத்தும் கீழே விழுந்து நொறுங்கிப் போயின.

அடுத்ததாக தேவர்களை அழைத்த பிரம்மதேவன், அவர்களையும் அதே முறைப்படி சாப்பிடச்சொன்னார். அவர்கள் லட்டை எடுத்தார்கள். நீட்டிய கையை மடக்காமல், எதிரே இருந்தவர் வாயில் ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொண்டார்கள். நிம்மதியாக சாப்பிட்டு முடித்தார்கள்.

இப்போது, பிரம்மா அசுரர்களை அழைத்துச் சொன்னார், “பார்த்தீர்களா! மற்றவர்களுக்கு உதவும் குணம்தான், அவர்களின் வயிறு நிறைய காரணமாக இருந்தது. நீங்கள் சுயநலவாதிகளாக இருந்ததால் எதுவுமே கிடைக்கவில்லை. சுயநலத்தை விட்டு பிறர் நலம் காப்பவர்களுக்கே இறைவனின் அருள் கிடைக்கும்” என்றார்.
Tags:    

Similar News