செய்திகள்

மம்தாவின் மார்பிங் புகைப்படம் - கைதான பெண்ணின் ஜாமின் மனு மீது நாளை விசாரணை

Published On 2019-05-13 06:53 GMT   |   Update On 2019-05-13 06:53 GMT
போட்டோ ஷாப் முறையில் மம்தாவின் மார்பிங் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததாக கைதான பெண்ணின் ஜாமின் மனு மீது நாளை சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்தவுள்ளது.
புதுடெல்லி:

மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா  பானர்ஜியை மிகவும் விகாரமாக சித்தரித்து சில நாட்களாக பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட  சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவியது.

இந்த புகைப்படத்தை பகிர்ந்ததாக பாஜக இளைஞரணியான யுவ மோர்ச்சாவை சேர்ந்த ஹவுரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா சர்மா என்ற பெண்ணை தாஸ்நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 14 நாள் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.



இந்த கைது நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த  பிரியங்கா சர்மாவின் தாயார், ‘அனைவரையும்போல் என் மகளும் இதை ‘ஷேர்’ செய்துள்ளார். ஆனால், அவர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர் என்பதால் அரசியல் நோக்கத்துடன் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில்,  பிரியங்கா சர்மாவை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் அவரது வழக்கறிஞர் என்.கே.கவுல் தாக்கல் செய்த மனு விடுமுறைக்கால நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சிவ் கண்ணா ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. இவ்விவகாரத்தை அவசர வழக்காக அனுமதித்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.

இதைதொடர்ந்து, இந்த ஜாமின் மனுவின் மீது நாளை விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News