ஆன்மிகம்
குலசேகரன்பட்டினம் கடற்கரையில் இருந்து புனித நீர் எடுத்து வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

தசரா திருவிழா: குலசேகரன்பட்டினம் வரும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

Published On 2020-10-15 07:55 GMT   |   Update On 2020-10-15 07:55 GMT
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குவதையொட்டி, பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் உதவி ஆணையர் (பொறுப்பு) ரத்தினவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இங்கு ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனை வழிபட்டு செல்வார்கள். சூரசம்ஹாரம் அன்று பல லட்சம் பக்தர்கள் இங்குள்ள கடற்கரையில் கூடுவார்கள்.

இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தற்போது கொரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் பக்தர்கள், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது, தசரா திருவிழா நாளை மறுநாள் தொடங்கி, வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. கொடியேற்றம், சூரசம்ஹாரம் மற்றும் கொடியிறக்க நிகழ்ச்சிகளில் பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்க அனுமதியில்லை. மேற்படி நிகழ்ச்சிகள் அனைத்தும் யூ டியுப் சேனல்களிலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

விழாவில் 2-வது நாள் முதல் 9-ம் நாள் வரை பக்தர்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து வரவேண்டும். அனைவருக்கும் கிருமி நாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்யப்பட்டு சுகாதாரத்துறை மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் பக்தர்கள் வேடம் அணிந்து, மேளதாளங்களுடன் கோவில் பகுதிக்கு வர அனுமதியில்லை. தங்கள் ஊர்களிலேயே காப்பு அணிந்து வேடமிட்டு விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.

திருவிழா நாட்களில் சிறப்பு அன்னதானத்திற்கு அனுமதியில்லை. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பூ, மாலை, தேங்காய், பழ வகைகள் கொண்டு வர வேண்டாம். பக்தர்கள் கண்டிப்பாக கோவில் வளாகத்திற்குள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

65 வயதிற்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள், சுவாசம் தொடர்பான நோய், இருதய நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். விழா நாட்களில் கடற்கரையில் தங்குவது, கடைகள் அமைப்பது போன்றவற்றிற்கும், கடற்கரையில் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் அனுமதியில்லை. இந்த நடைமுறைகளைக் கடைபிடித்து பக்தர்கள் அனைவரும் கோவில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தசரா திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி, கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

பெரும்பாலான பக்தர்கள் கடலில் இருந்து புனித நீர் எடுத்து வந்து, கோவிலில் வைத்து வழிபட்டு, அதனை தங்களது ஊர்களில் உள்ள தசரா பிறைகளில் தெளித்து வழிபடுகின்றனர்.
Tags:    

Similar News