செய்திகள்
மழை

கடலூர் மாவட்டம் முழுவதும் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை

Published On 2020-11-25 07:29 GMT   |   Update On 2020-11-25 07:29 GMT
நிவர் புயல் காரணமாக கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

கடலூர்:

நிவர் புயல் நேற்று இரவு தீவிர புயலாக மாறி கடலூருக்கு கிழக்கு தென் கிழக்கே 28 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கே 340 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

‘நிவர்’ புயல் சென்னை மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த புயலால் கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருந்தே மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது.

நேற்று காலை முதல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

அதேபோல் கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் இந்த மழை நீடித்தது. மேலும் மாவட்டத்தில் பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.

அதேபோல் கடலூர் மீனவ கிராமங்களான தேவனாம்பட்டினம், தாழங்குடா உள்ளிட்ட பகுதிகளில் கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்படுகிறது.

முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடலூர் உள்பட 7 மாவட்டங்களில் பஸ் போக்கு வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும் ‘நிவர்’ புயலின் தாக்கம் எப்படி இருக்குமோ என்ற ஒருவித அச்சத்தில் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

Tags:    

Similar News