செய்திகள்
எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம்

கொரோனா தடுப்பு பணிக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி

Published On 2021-05-17 09:58 GMT   |   Update On 2021-05-17 09:58 GMT
முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடியும், கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியமும் நிதியுதவியாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனாவில் இரண்டாவது அலை காரணமாக தொற்று பரவல் அதிகரிப்பால் கடும் மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியையும் அரசு சந்தித்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு, இந்த பேரிடரை எதிர்கொள்ளவும் தங்களால் இயன்ற உதவியை வழங்க வேண்டுமென தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து, பலரும் தங்களால் இயன்ற கொரோனா நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடியும், கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியமும் நிதியுதவியாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்றினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித்தரவும், உரிய நிவாரணங்களை வழங்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும்.

மேலும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் கொரோனா நிவாரண பணிகளுக்கென முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News