செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை உடைக்க மு.க.ஸ்டாலின் முயன்றார்- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Published On 2021-01-23 05:31 GMT   |   Update On 2021-01-23 05:31 GMT
ஜெயலலிதா மறைந்தபோது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியையும், ஆட்சியையும் கலைக்க முயன்றார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கோவை:

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

இன்றும், நாளையும் கோவை மாவட்டத்தில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று இரவு கோவை வந்த எடப்பாடி பழனிசாமி தொழில் துறையினருடன் கலந்துரையாடினார்.

இன்று காலை அவர் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார். கோவை ராஜவீதியில் கூடியிருந்த மக்களிடையே எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தேர்தல் வரும் நேரத்தில் திட்டமிட்டு பொய்யான அறிக்கையை வெளியிடுவதும், மக்கள் கிராம சபை என்ற நாடகத்தை அரங்கேற்றி அப்பாவி பெண்களை அழைத்து வந்து அமர வைத்து, கட்சிகாரர்கள் எழுதி கொடுக்கின்ற கேள்விகளுக்கு திண்ணையில் அமர்ந்து பதில் சொல்வது போல் ஸ்டாலின் காட்சிபடுத்தி வருகிறார்.

கோவையில் நடந்த கூட்டத்தில் நியாயமான கேள்வி கேட்ட பெண்ணுக்கு பதில் சொல்ல திராணி இல்லாமல் தான் ஸ்டாலின் தனது கட்சிக்காரர்கள் மூலம் அந்த பெண்ணை வெளியேற்றியதுடன், அவரை தாக்கியுள்ளனர். கூட்டத்தில் கேள்வி கேட்கும் பெண்ணுக்கு தகுந்த பதில் அளிப்பது தான் ஒரு சிறந்த தலைவரின் நாகரீகம். ஆனால் அதுகூட ஸ்டாலினுக்கு தெரியவில்லை.

மக்கள் கிராம சபை கூட்டம் என்பது மக்கள் குறைகளை கேட்கும் கூட்டம். ஆனால் தி.மு.க தலைவர் நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டங்களில் அ.தி.மு.க.வை மட்டுமே விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும் அந்த பெண்களிடம் விமர்சிக்க சொல்லி எழுதி கொடுத்து வருகிறார்கள்.

இப்படி தான் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதும் ஊர், ஊராக சென்று மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்தி பொய்யான வாக்குறுதிகள் மற்றும் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வெற்றி பெற்றனர். ஆனால் வெற்றி பெற்ற பிறகு சொன்ன வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றியுள்ளனரா?.

இந்த கிராம சபை கூட்டம் அ.தி.மு.க அரசை விமர்சிப்பிதற்காக மட்டுமே நடத்தப்படுகிறது. அது உண்மையில் மக்களுக்கான கூட்டம் இல்லை.

மக்கள் கிராம சபை கூட்டத்தில் பெண்கள், சிரிப்புடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பதை பார்க்கும்போது ஆட்சி மாற்றத்திற்கு தயாராகி விட்டதாக ஸ்டாலின கூறுகிறார். அவர்கள் அதற்காக சிரிக்கவில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் இதுபோன்று நடத்தி மனுக்கள் பெற்று எதனை நிறைவேற்றினர் என எள்ளி நகையாடுகின்றனர்.

2011-ம் ஆண்டுக்கு முன்பு தமிழகம் எப்படி இருந்தது. தற்போது 10 ஆண்டுகளில் எப்படி இருக்கிறது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். எண்ணற்ற பல திட்டங்களை அ.தி.மு.க அரசு இந்த கால கட்டத்தில் நிறைவேற்றியுள்ளது. நாங்கள் இதை இதை செய்தோம் என சொல்லி தான் ஓட்டு கேட்டு வருகிறோம். செய்யாததை சொல்லி ஓட்டு கேட்கவில்லை. நமது கழகத்தின் இருபெரும் தலைவர்கள் மறைந்தாலும் அவர்களது சாதனை இன்னும் அவர்களை நினைவுபடுத்தி கொண்டு தான் இருக்கிறது. இருவரும் மக்களுக்கான தலைவர்கள். ஆனால் தி.மு.க. தலைவர் குடும்பத்திற்கான தலைவர்.

இருபெரும் தலைவர்கள் மறைந்தாலும் அவர்களது வழியில் அ.தி.மு.க ஆட்சி வீறுநடை போட்டு சென்று கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா மறைந்தபோது தி.மு.க தலைவர் ஸ்டாலின் கட்சியையும், ஆட்சியையும் கலைக்க முயன்றார். ஆனால் நாங்கள் தொண்டர்களின் உதவியுடன் அதனை முறியடித்து ஆட்சியை தொடர்ந்து வருகிறோம். நான் முதலமைச்சராக பதவியேற்றபோது இன்னும் 1 மாதத்தில் ஆட்சி கலைந்து விடும். 6 மாதத்தில் ஆட்சி கலைந்து விடும் என கூறி வந்தார். ஆனால் நான் பொறுப்பேற்று 4 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டேன் என்பதை உங்களுக்கு நினைவு கூர விரும்புகிறேன்.

இந்த கோவை மாவட்டத்திற்கு மேம்பாலம், அத்திக்கடவு அவினாசி திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.
ஏழைகளை காக்கவே கிராமங்கள் தோறும் மினி கிளினிக் ஆரம்பித்தோம். அவை காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் செயல்படும். இதன் மூலம் கிராம மக்கள் பயன்பெறுவார்கள்.

கொரோனா காலத்திலும் இந்தியாவிலேயே 67 ஆயிரம் கோடி மதிப்பில் தொழில் முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழகம் தான். தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது மின்வெட்டு காரணமாக தொழில் துறையினர் மிகவும் அவதியடைந்து வந்தனர். அம்மா கடந்த 2011-ம் ஆண்டு தேர்தல் பரப்புரையின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுவேன் என கூறி அதனை செய்தும் காட்டினார். இதுதவிர சட்டம் ஒழுங்கில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கொள்ளை, நில அபகரிப்புகள் அதிகரித்து தமிழகம் அமைதி பூங்கா என்ற பெயரை இழந்து விடும். எனவே மக்கள் தேர்தல் நேரத்தில் சிந்தித்து மக்களை நேசிக்கும் கட்சியான அ.தி.மு.கவுக்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்தில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே கட்சி தி.மு.க. ஆனால் அவர் ஊழலை பற்றி பேசி வருகிறார். பொய்யான குற்றச்சாட்டுகளை அறிக்கையாக கொண்டு சென்று ஆளுநரிடம் கொடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்கிறார். நான் கேட்கிறேன். நாம் இருவரும் பொதுவான ஒரு இடத்தில் விவாதம் செய்யலாம்.

அப்போது எந்த துறையில் எவ்வளவு ஊழல் நடந்தது என்பதை நீங்கள் எந்தவித துண்டு சீட்டும் இல்லாமல் சொல்ல வேண்டும். அப்படி சொல்ல முடியுமா? அப்படியென்றால் நான் உங்களுடன் விவாதிக்க தயாராக உள்ளேன். கொரோனா கால கட்டத்தில் ஏழை மக்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டனர். அவர்கள் கஷ்டத்தை போக்கவே பொங்கல் பண்டிகையின் போது ரூ.2500 வழங்கினோம். ஆனால் அதனை கூட தடுக்க தி.மு.க முயற்சித்தது.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News