வழிபாடு
பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்

பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்

Published On 2022-04-16 03:58 GMT   |   Update On 2022-04-16 03:58 GMT
தொடர் விடுமுறையை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் படையெடுத்தனர். இதனால் 3½ மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக விளங்கும் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். சுபமுகூர்த்தம், வாரவிடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை இருமடங்கு அதிகரித்து காணப்படும்.

அந்தவகையில் தமிழ் புத்தாண்டு, புனிதவெள்ளி என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய கார், வேன், பஸ் என ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அதேபோல் நேற்று கேரள புத்தாண்டான சித்திரை விஷு என்பதால் கேரள பக்தர்கள் வருகையும் அதிகம் இருந்தது. அவர்கள் முடிக்காணிக்கை செய்து வழிபட்டனர்.

குறிப்பாக அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயிலான பாதவிநாயகர் கோவில் பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் மற்றும் தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். அவர்கள் 3½ மணி நேர காத்திருந்து, பின்னரே சாமி தரிசனம் செய்ய முடிந்தது.

பழனி பகுதியில் நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் இல்லை. எனவே பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பின் வெளிப்பிரகாரம், படிப்பாதை மற்றும் அடிவாரம் செல்பி ஸ்பாட் ஆகிய இடங்களில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News