உள்ளூர் செய்திகள்
வெளிநாட்டு பெண்ணிடம் பக்தர்கள் மோர் வாங்கி அருந்தும் காட்சி.

மோர் விற்பனை செய்து பக்தர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய வெளிநாட்டுப் பெண்

Published On 2022-04-16 05:03 GMT   |   Update On 2022-04-16 05:03 GMT
வெளிநாட்டுப் பெண் மண்பானையில் மோரை வைத்து ஒரு டம்ளர் மோர் ரூ.10-க்கு விற்பனை செய்தார். அவருக்கு கணவர் மற்றும் உறவினர்கள் உதவி செய்தனர்.
திருவண்ணாமலை:

இன்றைய தலைமுறையினரிடம் பாரம்பரிய இயற்கை பானங்களின் நன்மைகள் பற்றி தெரியவில்லை. இதனால் கண்ட கண்ட குளிர்பானங்களை வாங்கி அருந்தி பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலையில் தமிழக பாரம்பரிய இயற்கை பானமான மோர் உடலுக்கு நன்மை தரும். வெயிலுக்கு குளிர்ச்சி தரும் என்பதால் அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெளிநாட்டு பெண் ஒருவர் பக்தர்களுக்கு இன்று மோர் விற்பனை செய்தார்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு மோர் விற்பனை செய்த வெளிநாட்டு பெண் கூறும்போது, திருவண்ணாமலையின் இயற்கை அழகை ரசிக்க வந்துள்ள நான் தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி அறிந்துகொண்டேன்.

தமிழகத்தில் இயற்கை பானமாக மோர் கருதப்படுகிறது. அதனை குடிப்பதைத் தவிர்த்து இன்றைய பொதுமக்கள் குளிர் பானங்களை குடித்து தங்களது உடல் நலத்தை கெடுத்துக் கொள்கின்றனர்.

எனவே இயற்கை பானமான மோர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பக்தர்களுக்கு மோர் விற்பனை செய்து வருகிறேன். குறைந்த விலையில் கிடைக்கும் மோர் உடல் சூட்டைத் தணித்து ஆரோக்கியம் அளிக்கும் சக்தி கொண்டது.

எனவே மக்கள் மோரை புறக்கணிக்காமல் அதனை கோடைக்காலங்களில் அருந்தி பயனடைய வேண்டும் என்றார். வெளிநாட்டுப் பெண் மண்பானையில் மோரை வைத்து ஒரு டம்ளர் மோர் ரூ.10-க்கு விற்பனை செய்தார். அவருக்கு கணவர் மற்றும் உறவினர்கள் உதவி செய்தனர்.
Tags:    

Similar News