ஆன்மிகம்
பிரம்மா, விஷ்ணு, சிவன்

மனிதனின் முக்காலத்தை அறிந்த முப்பத்து முக்கோடி தேவர்கள்

Published On 2019-09-14 08:55 GMT   |   Update On 2019-09-14 08:55 GMT
கடவுள் என்பவர் எப்போதும் ஒருவர்தான். படைக்கும் போது அவர் பிரம்மாவாகவும், காக்கும் போது மஹா விஷ்ணுவாகவும், அழிக்கும் போது சிவனாகவும் அவர் இருப்பதாக நமது ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடவுள் என்பவர் எப்போதும் ஒருவர்தான். படைக்கும் போது அவர் பிரம்மாவாகவும், காக்கும் போது மஹா விஷ்ணுவாகவும், அழிக்கும் போது சிவனாகவும் அவர் இருப்பதாக நமது ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடவுள் உருவாக்கிய இந்த பிரபஞ்சத்தையும், அதில் அடங்கியுள்ள உலகங்களையும், அதன் உயிர்களையும் அவற்றின் வாழ்க்கைக்கு ஏற்றவாறு அமைத்து கொடுப்பது தேவர்களது பணியாகும். தேவர்கள் என்பவர்கள் கடவுள்கள் அல்ல. தேவர்கள் கடவுளால் படைக்கப்பட்ட உயர் நிலை உயிர்கள் ஆவார்கள். அதாவது, மனிதர்களுக்கு அவர்களது வாழ்க்கை பரு உடலை சார்ந்தே அமைகிறது. ஆனால், தேவர்களுக்கு உருவம் மற்றும் அருவம் ஆகிய இரு நிலைகள் இருக்கின்றன.

தேவர்களது எண்ணிக்கை எப்போதுமே முப்பத்து முக்கோடி என்று சொல்லப்படுகிறது. தேவர்களது செயல்களுக்கு ஏற்ப கின்னரர், கிம்புருஷர், யட்சர், சித்தர், சாரணர், கந்தர்வர் என அவர்களது பெயர்கள் வழங்கப்படுகின்றன. பொதுவாக, தேவர்களுக்கு மூன்று வகையான வடிவங்கள் இருப்பதாக வேதங்கள் குறிப்பிடுகின்றன. அதாவது, தேவ லோகத்தில் தெய்வீக உருவத்துடன் அவர்கள் இருப்பதை ஆதி தெய்வீகம் என்றும், பூமியில் பஞ்ச பூதங்களோடு கலந்து உருவம் எதுவும் இல்லாமல் இருக்கும் நிலையில் ஆதி பவுதிகம் என்றும், அனைத்து உயிர்களுக்குள்ளும் நிறைந்து இருக்கும் போது அத்யாத்மிகம் என்றும் சொல்லப்படும். கடவுள் படைத்த தேவர்கள் தவிர, மனித வாழ்க்கையில் உயர்ந்த தவத்தையும், மிக உயர்ந்த ஞானத்தையும், சிறந்த தியாகத்தை புரிந்தவர்கள் ஆத்ம பரிணாமத்தின் மூலம் தேவர்கள் ஆவதும் இயற்கை நியதியாக உள்ளது.

மனிதர்கள் வாழும் பூமிக்கு பூலோகம் என்ற பெயர் உண்டு. அதேபோல தேவர்கள் வசிக்கும் பிரபஞ்ச அண்ட வெளியின் ஒரு பகுதி தேவலோகம் என்று அழைக்கப்படுகிறது. அதன் தலைநகரம் அமராவதி பட்டணம். அங்குதான் தேவர்களின் அரசன் தேவேந்திரன் ஆட்சி செய்வதாக புராணங்கள் குறிப்பிட்டுள்ளன. பசி, வியாதி, முதுமை, மரணம் ஆகிய நான்கு துன்பங்கள் தேவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு பசி என்பதே இல்லை. அவர்கள் அமிர்தத்தை மட்டும் உணவாக உட்கொள்கிறார்கள். பூலோகத்தின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும்.

தேவர்களின் அரசன் தேவேந்திரன். அவனது மனைவி இந்திராணி. மகன் பெயர் ஜெயந்தன். ஐராவதம் என்ற வெள்ளை யானையில் ஏறி பவனி வரும் இவனது கையில் வஜ்ராயுதம் இருக்கும். அவனுக்கு கீழ்தான் முப்பத்து கோடி தேவர்களும் வருகிறார்கள். அவர்களில் பன்னிரெண்டு பேர்களைக்கொண்ட துவாதசாம்ச ஆதித்தர்கள் குழு, ஏகாதசாம்ச ருத்திரர்கள் என்ற பதினொரு பேர்கள் கொண்ட குழு மற்றும் எட்டு அஷ்டவசுக்கள், அஸ்வினி தேவர்கள் இருவர் ஆக முப்பத்து மூன்று பேர் தேவர்கள் ஆவர். அந்த முப்பத்து மூன்று பேருக்கும், தலைக்கு ஒரு கோடி பணியாளர்கள் என்ற நிலையில் மொத்தம் முப்பத்து முக்கோடி தேவர்கள் என்பது கணக்கு.

வைகத்தன், விபஸ்சுதன், வாசன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோக பிரகாசன், லோக சாட்சி, திருவிக்கிரமன், ஆதித்தன், திவாகரன் அங்கிமாலி ஆகியோர் பன்னிரெண்டு ஆதித்தர்கள் ஆவார்கள்.

மகாதேவன், ருத்ரன், சங்கரன், நீலலோகிதன், ஈசானன், விஜயன், வீமதேவன், சவும்யதேவன், பலோத்பவன், கபாலிகன், ஹரன் ஆகிய பதினொரு பேரும் ஏகாதசாம்ச ருத்ரர்கள் என அழைக்கப்படுகின்றனர். இந்த ருத்ரர்கள் படைப்பு கடவுளான பிரம்மாவின் நெற்றியில் தோன்றி, அவரது படைப்பு தொழிலுக்கு உறுதுணையாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

அனலன், அனிலன், ஆபத்சைவன், சோமன், தரன், துருவன், பிரத்யுஷன், பிரபாசன் ஆகியோர் அஷ்ட வசுக்கள் ஆவார்கள். நாசத்யன், தசரன் என்னும் இரண்டு பேர் அஸ்வினி குமார்கள் என்ற மருத்துவ தேவர்கள் ஆவார்கள்.

மனிதர்கள் அவர்களது புறக்கண்களால் இந்த தேவர்களைக் காண முடியாது என்பதுடன் மனிதர்கள் பல ஆண்டுகள் கற்ற பிறகே வேதம் பற்றி அறிய முடியும். ஆனால், தேவர்கள் தங்களது பிறவியிலேயே வேதம் பற்றிய அறிவோடு பிறப்பதாக சொல்லப்படுகிறது. மனிதர்கள் செய்கின்ற நல்லது, கெட்டது ஆகிய செயல்களை கடவுளிடம் இருந்து மறைக்க முடியாது. காரணம், அதை கவனிக்கும் பணியில் தேவர்கள், கடவுளுக்கு துணையாக பலகோடி உயிர்களின் செயல்களை கண்காணித்து அது பற்றிய தகவலை கடவுளுக்கு அளிப்பதாக ஐதீகம்.

இந்த உலகத்தில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களின் உடலில் உள்ள பகுதிகள், தனித்தனியாக தேவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக புராணங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி சூரியன் அனைத்து உயிர்களின் கண்களிலும், அக்னி வாக்கு மூலமாகவும், இந்திரன் கைகளிலும் வாசம் செய்வதாக சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. மனிதர்களுக்கு அதிகமாக எண்ணங்கள் உருவாக கண்கள் தான் முக்கியக் காரணம். பல நேரங்களில் கண் வழியாக பெற்ற எண்ணமே வாய்வழியாக சொல்லாக வெளிவருகிறது. பின்னர் அது கைகள் மூலம் செயலாக மாறுகிறது. அந்த வகையில் அனைத்து உயிர்களின் சிந்தனை சொல், செயல் ஆகிய அனைத்தும் கடவுளால் ஒவ்வொரு வினாடியும் கண்காணிக்கப்படுகிறது

அந்த வேத உண்மையை உணர்ந்தவர்கள் நல்ல கர்மங்களில் ஈடுபட்டு , நல்ல காரியத்தை தொடர்ந்து செய்து தேவர்களாக ஆகலாம் அல்லது அவர்கள் விருப்பப்படி இறைவனுடன் ஐக்கியம் அடையலாம். ஆனால், தேவராக இருந்தால் கூட மீண்டும் மனிதராக பிறந்துதான் இறைவனது திருவடிகளை அடைய இயலும் என்று வேதங்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளன.
Tags:    

Similar News