ஆன்மிகம்
சென்ன கேசவ பெருமாள் கோவிலில் நடைபெற்ற 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகளுக்கான சிறப்பு பூஜை

சென்ன கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை: திருப்பதி திருக்குடை உற்சவம் தொடங்கியது

Published On 2021-10-06 07:57 GMT   |   Update On 2021-10-06 07:57 GMT
சென்ன கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் திருமலை திருப்பதி திருக்குடைகள் உற்சவம் தொடங்கியது. வருகிற 10-ந் தேதி திருமலையில் உள்ள ஏழுமலையானுக்கு ஆர்.ஆர்.கோபால்ஜி திருக்குடைகளை சமர்ப்பிக்கிறார்.
சென்னை :

திருமலையில் எழுந்தருளி இருக்கும் ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவத்தின் போது ஆண்டு தோறும் தமிழகத்தில் இருந்து 2 வகையான மங்கலப்பொருட்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. ஒன்று, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலைகள், மற்றொன்று தமிழக பக்தர்கள் சார்பில் வழங்கப்படும் திருப்பதி திருக்குடைகள்.

தமிழக பக்தர்கள் சார்பாக திருமலை ஏழுமலையானுக்கு இந்து தர்மார்த்த சமிதி வழங்கும் 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகளை ஆண்டு தோறும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் தரிசிப்பார்கள். அதன்படி, இந்த ஆண்டு வருகிற 10-ந் தேதி நடைபெறும் திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது இந்து தர்மார்த்த சமிதி சார்பாக, திருமலையில் எழுந்தருளி இருக்கும் ஏழுமலையானுக்கு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

அதற்காக இந்த ஆண்டுக்கான, திருமலை திருப்பதி திருக்குடை உற்சவம், கடந்த 3-ந் தேதி பட்டாளத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் யாக பூஜைகளுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, சென்னை பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில், 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகளுக்கும், நேற்று காலை 11 மணிக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தன. பெருமாள் கோவில் வளாகத்தில் அணிவகுத்து நின்ற திருக்குடைகளுக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன.

இந்த சிறப்பு பூஜை நிகழ்ச்சியில், இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம், அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி, விசுவ ஹிந்து வித்யாகேந்திரா இணைப் பொதுச் செயலாளர் ஆர்.பி.கிருஷ்ணமாச்சாரி, தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் மாநில செயல் தலைவர் ஆர்.செல்லமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தான ஆலோசனைக் குழு தலைவர் சேகர் ரெட்டி கலந்து கொண்டு, அங்கு எழுந்தருளி இருந்த, ஸ்ரீ பாதங்களுக்கு, திருமலை பிரசாதம் அளித்து மரியாதை செய்து, திருக்குடைகளை வணங்கினார்.

வழக்கமாக, சிறப்பு பூஜைக்குப்பின், அன்று மாலை திருக்குடைகள் கவுனி தாண்டும். பின்னர் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில், 5 நாட்கள் திருக்குடை ஊர்வலம் நடைபெறும். அதை 20 லட்சம் பக்தர்கள் தரிசிப்பார்கள். பின்னர், திருக்குடைகள் திருமலை ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படும்.

இந்த ஆண்டு, கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக, அரசின் வழிகாட்டி நெறிமுறைப்படி திருக்குடை ஊர்வலம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு பூஜையை தரிசிக்க, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள், தங்கள் இருப்பிடத்தில் இருந்தே திருக்குடைகளை தரிசிக்க, முகநூல் மற்றும் யு-டியூப் சேனலில், திருக்குடை சிறப்பு பூஜைகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சென்ன கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகளில், 2 திருக்குடைகள் வருகிற 9-ந் தேதி, திருச்சானூர் தாயார் கோவிலில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து வருகிற 10-ந் தேதி திருமலை ஏழுமலையான் கோவிலில் 9 திருக்குடைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. இந்த திருக்குடைகளை இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி சமர்ப்பிக்க உள்ளார்.
Tags:    

Similar News