செய்திகள்
திமுக

30 ஆண்டுகளுக்கு பின்னர் சங்கரன்கோவிலை கைப்பற்றிய திமுக

Published On 2021-05-03 06:48 GMT   |   Update On 2021-05-03 06:48 GMT
தென்காசி மக்களவை தொகுதியில் முதல் முறையாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் தனி தொகுதியாக உள்ளது. இங்கு கடந்த 1952 முதல் 2016 வரை 16 தேர்தல்கள் நடந்து உள்ளது.

இதில் காங்கிரஸ் 3 முறையும், தி.மு.க. 4 முறையும், அ.தி.மு.க. 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 1989-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தங்கவேலு வெற்றி பெற்று அமைச்சரானார்.

அதன்பின்னர் 1991 முதல் தொடர்ந்து 30 ஆண்டுகள் அ.தி.மு.க.வே வெற்றி பெற்று வந்தது. கடந்த முறை நகராட்சி சேர்மனாக இருந்த ராஜலெட்சுமி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு அமைச்சரானார்.

இந்த முறை மீண்டும் அவர் போட்டியிட்டார். தி.மு.க. சார்பில் வக்கீல் ராஜா போட்டியிட்டார். மேலும் அ.ம.மு.க. உள்பட நாம் தமிழர் என 15 பேர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. வேட்பாளர் ராஜா 71,184 வாக்குகளும், அமைச்சர் ராஜலட்சுமி 65,830 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் ராஜலெட்சுமியை விட 5,354 வாக்குகள் கூடுதல் பெற்று ராஜா வெற்றி பெற்றார்.

இதன்மூலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு பின்னர் சங்கரன்கோவில் தொகுதியை தி.மு.க. கைப்பற்றியது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தென்காசி மக்களவை தொகுதியில் முதல் முறையாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நீண்ட காலத்திற்கு பின்னர் சங்கரன்கோவில் தொகுதியை கைப்பற்றியதால் தி.மு.க.வினர் உற்சாக மடைந்தனர்.

சங்கரன்கோவில் தொகுதியில் இருந்து கடந்த காலங்களில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றவர்கள் அமைச்சர்களாக பதவி வகித்தனர். இந்த முறை தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி சார்பில் தென்காசியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடாரும், வாசுதேவநல்லூரில் ம.தி.மு.க. வை சேர்ந்த சதன் திருமலைக்குமாரும் வெற்றி பெற்றனர். தி.மு.க. சார்பில் ராஜா மட்டுமே மாவட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். எனவே அவருக்கு இந்த முறை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News