ஆன்மிகம்
ஹம்ச வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும்

பிரம்மோற்சவ விழா: ஹம்ச, சேஷ வாகனங்களில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் உலா

Published On 2021-03-11 06:40 GMT   |   Update On 2021-03-11 06:40 GMT
மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளில் ஹம்ச, சேஷ வாகனங்களில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை ஹம்ச வாகனம் என்ற அன்னப்பறவை வாகனத்தில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

அதைத்தொடர்ந்து இரவு சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அனைத்துச் சிவன் கோவில்களில் லிங்க திருமேனியை வால் மற்றும் உடல் பகுதியால் சுற்றியவாறும், தலையை படம் விரித்தப்படி ஆடும் பைந்நாகமாகவும் இருப்பது சேஷம் என்ற நாகம். பிரபஞ்சத்தையே ஆளும் பெருந்தகைக்கு பாதுகாப்பாகவும், அடி தொழுது பூஜிக்கும் காவலனாகவும், வாசம் மிகு வாய்க்காற்றால் தூபமிடுபவன்.

தன் உடலில் உள்ள ரத்தினங்களால் தீபாராதனை செய்பவன். நாக்குகளால் ஆலவட்டம் வீசுபவன். படத்தால் குடைப்பிடிப்பவன். லிங்க திருமேனியை அலங்கரித்து ஆராதனை செய்பவன் சேஷன். கழுத்தில் சுற்றியபடி படமெடுத்து ஆடும் சேஷனை பெருமைப்படுத்தும் விதமாக சிவன் சேஷ வாகனத்தில் எழுந்தருளினார்.

உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சிறப்பு அலங்காரத்தில் யாளி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Tags:    

Similar News