செய்திகள்
சென்னை ஐகோர்ட்

தகுதியான மாணவர்களுக்கு கல்வி பயிலும் வாய்ப்பு கிடைப்பது இல்லை- ஐகோர்ட்டு வேதனை

Published On 2020-11-22 01:23 GMT   |   Update On 2020-11-22 10:49 GMT
தகுதியான மாணவர்களுக்கு கல்வி பயிலும் வாய்ப்பு போதிய அளவில் கிடைப்பது இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு வேதனையுடன் கருத்து தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

பொருளாதார ரீதியில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு, 10 சதவீத இடஒதுக்கீட்டு முறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த சலுகையைப் பெற ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ மேற்படிப்பில் சேர எழும்பூரை சேர்ந்த பூர்வி என்பவர் முடிவு செய்தார். இதற்காக பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினர் என்று சான்றிதழ் வழங்க கோரி எழும்பூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்தார்.

ஆனால், ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறி பூர்விக்கு சான்றிதழ் வழங்கவில்லை. இதை எதிர்த்து அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர் கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனையில் டாக்டராக கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் பணியாற்றி வருகிறார். 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 2020-ம் ஆண்டு மார்ச் வரை அவரது வருமானம் ரூ.7 லட்சத்து 37 ஆயிரம் என்று வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்துள்ளார்.

அவரது தந்தைக்கு வருமானம் இல்லை. தாய் உயிருடன் இல்லை. எனவே, ரூ.8 லட்சத்துக்கு குறைவாக வருமானம் மனுதாரர் குடும்பம் பெற்றுள்ளதால், அவருக்கு பொருளாதார ரீதியாக பின் தங்கியவர் என்ற சான்றிதழை வழங்க மறுத்த எழும்பூர் தாசில்தாரின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்.

இப்போது, உயர் கல்வியில் இடஒதுக்கீடு பிரச்சினை மிகவும் தீவிரமடைந்துள்ளது. இது பல்வேறு பிரிவினரிடையே வேற்றுமையை உருவாக்குகிறது. அறிவுள்ள, தகுதியான மாணவர்களுக்கு கல்வி பயிலும் வாய்ப்பு போதிய அளவில் கிடைப்பது இல்லை. ஆனால், இடஒதுக்கீடு பெறுபவர்கள் இந்த வாய்ப்பை அனுபவிக்கின்றனர்.

இதனால் ஏராளமான மாணவர்கள் தங்களது லட்சியத்தையும், கனவையும் அடைய முடியாமல் உள்ளனர். சமுதாயத்தில் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்களை முன்னேற்றுவதற்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அதில் உயர்கல்வியில் எந்த ஒரு சமரசமும் இருக்கக்கூடாது. இடஒதுக்கீட்டு முறையினால், பொருளாதார ரீதியான பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டு முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

அந்த வகையில் மனுதாரர் எம்.பி.பி.எஸ்., படிப்பில் அதிக மதிப்பெண் எடுத்துள்ளார். அதனால், மருத்துவ மேற்படிப்பில் சேரும் வகையில், அவருக்கு பொருளாதார ரீதியாக பின்தங்கியவர் என்ற சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
Tags:    

Similar News