செய்திகள்
ஐகோர்ட் மதுரை கிளை

அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை எடுத்து விற்பதை ஏற்க முடியாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2021-01-16 02:02 GMT   |   Update On 2021-01-16 02:02 GMT
அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை எடுத்து விற்பதை ஏற்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மதுரை:

மதுரை அயன்பாப்பாகுடியை சேர்ந்த ஆஸ்டின், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை அயன்பாப்பாகுடியில் பலர் தங்கள் நிலத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதற்கு அரசிடம் அனுமதி பெறவில்லை.

இதனால் அயன்பாப்பாகுடி பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. எனவே சட்டவிரோதமாக நிலத்தடி நீர் விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும், நிலத்தடி நீர் எடுக்க பயன்படுத்தும் ஜெனரேட்டர் மற்றும் லாரிகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், பொது உபயோகம் என்ற பெயரில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்கின்றனர். இதை தடுக்க அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என வாதாடினார்.

விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அயன்பாப் பாகுடியில் 8 பேர் அரசிடம் அனுமதி பெறாமல் நிலத்தடி நீர் எடுத்து விற்பனை செய்து வருவதாக மதுரை வடக்கு தாசில்தார் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இதை அனுமதித்தால் குற்றச்செயலை ஊக்குவிப்பதாகும். இதை ஏற்க முடியாது. எனவே இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை நிலத்தடி நீரை எடுக்க அனுமதி வழங்கக்கூடாது. வர்த்தக நோக்கத்தில் நிலத்தடி நீர் எடுக்கக்கூடாது. மனு தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News