செய்திகள்
சிவகங்கை மாவட்ட புதிய கலெக்டராக மதுசூதன் ரெட்டி பொறுப்பேற்ற போது எடுத்த படம்.

சிவகங்கை மாவட்ட புதிய கலெக்டராக மதுசூதன்ரெட்டி பொறுப்பேற்றார்

Published On 2020-11-16 10:14 GMT   |   Update On 2020-11-16 10:14 GMT
சிவகங்கை மாவட்ட கலெக்டராக மதுசூதன்ரெட்டி பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றவுடன் நேரடியாக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினார்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட கலெக்டராக இருந்த ஜெயகாந்தன் மீன்வளத்துறை இயக்குனராக மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் சுகாதாரத்துறை இணை ஆணையாளராக பணிபுரிந்த மதுசூதன் ரெட்டி சிவகங்கை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

புதிய கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார்.அவரிடம் கலெக்டர் ஜெயகாந்தன் பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிய கலெக்டராக மதுசூதன் ரெட்டி பொறுப்பு ஏற்றதும் அவரை மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஊரக வளர்ச்சி முகமை திட்டஇயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, கோட்டாட்சியர்கள் முத்துக்கழுவன், சுரேந்திரன், மருத்துவத்துறை இணை இயக்குனர் டாக்டர் இளங்கோ மகேஸ்வரன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதா மணி மற்றும் அரசு அலுவலர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள மதுசூதன் ரெட்டி ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.இவர் பொறியியல் பட்டப்படிப்பில் முதுகலை படிப்பை முடித்துள்ளார்.

2011-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் வேலூர் மாவட்டத்தில் பயிற்சி கலெக்டராகவும் தொடர்ந்து திண்டுக்கல் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சப்-கலெக்டராகவும் பணிபுரிந்துள்ளார். பின்னர் வருவாய் துறையில் நில நிர்வாக ஆணையாளராக 2 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். தற்போது சென்னை மாநகராட்சியில் சுகாதாரத்துறை இணை ஆணையாளராக பணியாற்றினார்.

புதிய கலெக்டராக மதுசூதன் ரெட்டி பொறுப்பு ஏற்றவுடன் உடனடியாக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.அங்குள்ள கொரோனா வார்டை பார்வையிட்ட அவர் அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். அவருடன் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதா மணி மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

Tags:    

Similar News