செய்திகள்
கங்குலி

ஆஸ்பத்திரியில் இருந்து கங்குலி ‘டிஸ்சார்ஜ்’- நலமாக இருப்பதாக அறிவிப்பு

Published On 2021-01-07 08:24 GMT   |   Update On 2021-01-07 08:24 GMT
உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கங்குலி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கொல்கத்தா:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி. சி.ஐ.) தலைவரான சவுரவ் கங்குலிக்கு கடந்த 2-ந்தேதி லேசான மாரடைப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள உட்லான்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருந்தது தெரியவந்தது.

இதில் ஒரு அடைப்பு ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் நீக்கப்பட்டது. மற்ற அடைப்புகள் நீக்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படுகிறது. இதன் பிறகு கங்குலி நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து கங்குலி இன்று டிஸ்சார்ஜ் ஆனார். ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் மிகவும் நலமாக இருக்கிறேன். மருத்துவமனையில் எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஒவ்வொருவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

48 வயதான கங்குலி தனியார் வாகனத்தில் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு சென்றார். வீட்டில் அவர் தினசரி கண்காணிப்பில் இருப்பார் என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

Tags:    

Similar News