செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை பார்வையிட்ட போலீசார்.

சென்னையில் இருந்து சென்ற ரெயிலில் வெடிபொருள்கள் சிக்கியது- சென்னை பெண் பயணியை பிடித்து விசாரணை

Published On 2021-02-26 07:35 GMT   |   Update On 2021-02-26 07:35 GMT
சென்னையில் இருந்து மங்களூரு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயங்கர வெடிபொருள்கள் சிக்கியது. இந்த சம்பவம் இன்று கோழிக்கோடு ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவனந்தபுரம:

சென்னையில் இருந்து மங்களூருவுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை கோழிக்கோடு ரெயில் நிலையம் வந்தது.

ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் பெட்டிகளில் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெட்டியில் பெண் பயணிகள் அமரும் இருக்கைக்கு கீழே ஒரு பார்சல் இருந்தது.

சந்தேகம் அடைந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த பார்சலை கைப்பற்றி பிரித்து பார்த்தனர்.

அந்த பார்சலில் பயங்கர வெடிபொருள்கள் இருந்தன. 117 ஜெலட்டின் குச்சிகள், 350 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட ஆபத்தை ஏற்படுத்தும் வெடிமருந்துகள் இருந்தன.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.

வெடிபொருள் பார்சல் இருந்த இருக்கையில் சென்னையில் இருந்து வந்த பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். அவர் சென்னையில் இருந்து தலச்சேரி செல்ல டிக்கெட் எடுத்து இருந்தார்.

சந்தேகத்தின் பேரில் ரெயில்வே போலீசார் அந்த பெண்ணை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பிறகே அவருக்கு வெடிபொருள் கடத்தலில் தொடர்பு இருக்கிறதா? என்பது தெரியவரும்.

இந்த சம்பவம் இன்று கோழிக்கோடு ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News