வழிபாடு
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்த காட்சி.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு: 14-ந்தேதி ஜோதி தரிசனம்

Published On 2021-12-31 04:07 GMT   |   Update On 2021-12-31 04:07 GMT
இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் இன்று முதல் எருமேலி பெருவழிப்பாதை வழியாகவும் சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜை, வழிபாடுகளுக்கு பிறகு கடந்த 26-ந் தேதி மண்டல பூஜை நடந்தது. அன்றைய தினம் இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.

இந்தநிலையில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. நேற்று மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறவில்லை. பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும். பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் 14-ந் தேதி நடைபெறுகிறது.

ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சபரிமலை தரிசனத்திற்கு தினசரி

60 ஆயிரம் பக்தர்களுக்கும், நேரடி உடனடி ஆன்லைன் முன் பதிவு செய்யும் அனைவருக்கும் தற்போது தரிசன அனுமதி வழங்கப்படும். மேலும் இன்று முதல் எருமேலி பெருவழிப்பாதை வழியாகவும் சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். 35 கி.மீ தூரமுள்ள இந்த பாதையில் 25 கி.மீ தூரம் அடர்ந்த காட்டு பகுதி என்பதால் பலத்த கட்டுப்பாடுகளுடன் மட்டுமே ஐயப்ப பக்தர்கள் எருமேலி பெருவழி பாதை வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர்.

எருமேலியில் பக்தர்கள் உடனடி தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது. அதே போல் எருமேலி கோழிக்கடவில் இருந்து அதிகாலை 5.30 மணி முதல் காலை 10.30 மணி வரையிலும், அழுதக்கடவு, முக்குழியில் இருந்து காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
Tags:    

Similar News