கோவில்கள்
மகேஸ்வரம் சிவபார்வதி கோவில்

மகேஸ்வரம் சிவபார்வதி கோவில்- கேரளா

Published On 2022-02-24 01:25 GMT   |   Update On 2022-02-24 01:25 GMT
கேரளா மாநிலம் மகேஸ்வரம் சிவபார்வதி கோவிலில் அமைக்கப்பட்டுள்ள, 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம்தான் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்துவதாக இருக்கிறது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, செங்கல் என்ற ஊர். இங்கு மகேஸ்வரம் சிவபார்வதி கோவில் உள்ளது. இந்த ஆலயத்தின் நுழைவு வாசலில் இரண்டு பிரமாண்ட யானைகள் நம்மை வரவேற்கின்றன. அதன் நடுவே திருக்கோவிலை நோக்கியபடி பிரமாண்டமான நந்தி சிலையும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆலயத்திற்குள் 12 ஜோதிர்லிங்கங்களையும், விநாயகரின் 32 வடிவங்களையும் தரிசிக்க முடியும்.

இங்கு அமைக்கப்பட்டுள்ள, 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம்தான் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்துவதாக இருக்கிறது. இந்த சிவலிங்கத்தின் முன்பாக உள்ள பிரமாண்டமான இரண்டு திரிசூலங்களும், மிகப்பெரிய உடுக்கையால் இணைக்கப்பட்டுள்ளன. ஆசியாவிலேயே மிகவும் உயரமான இத்தல சிவலிங்கம், ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம்பிடித்துள்ளது. 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சிவலிங்க கட்டுமானப் பணி முடிவடைவதற்கு 6 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த சிவலிங்கத்தின் உயரம் மட்டுமல்ல, அதன் கட்டமைப்பும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடியது.

இந்த சிவலிங்கத்தை அமைப்பதற்காக, காசி, கங்கோத்ரி, ரிஷிகேஷ், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பத்ரிநாத், கோமுக், கைலாஷ் ஆகிய பல புண்ணிய தலங்களில் இருந்து நீர், மண் போன்றவை கொண்டுவரப்பட்டு, கட்டுமானப் பொருட்களுடன் கலக்கப்பட்டிருக்கின்றன. எனவே இந்த சிவலிங்கமும், தெய்வீகத் தன்மை கொண்டதாக பார்க்கப்படுகிறது.

சிவலிங்கத்தை நாம் உள்ளே சென்று தரிசிக்க முடியும். 8 தளங்களைக் கொண்டதாக இந்த சிவலிங்கத்தின் உட்பகுதி இருக்கிறது. உட்புறத் தோற்றம், ஒரு குகைக்குள் பயணிப்பது போன்ற பிரமிப்பை நிச்சயம் உருவாக்கும். சிவலிங்கத்தின் உள்ளே, சப்தரிஷிகளின் சிலைகள், 108 சிவலிங்கங்கள், மற்றும் உட்புறச் சுவர் முழுவதும் சிவபெருமானின் 64 வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தளத்திலும் பக்தர்கள் தியானம் செய்யும் வகையிலான இருக்கைகளும் இடம்பெற்றுள்ளன.

தியானத்தின் மூலம் மனிதர்கள் இறைவனை அடையலாம் என்பதை வலியுறுத்தும் நோக்கில், இந்த சிவலிங்கத்தின் முதல் ஏழு தலங்களும் ஏழு சக்கரங்களைக் குறிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலத்திலும் அந்தந்த சக்கரங்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இறுதியாக எட்டாவது தளத்தில், சிவபெருமானும், பார்வதியும் அமர்ந்த நிலையில் கயிலாய மலையில் இருந்து காட்சி தருவது போன்ற சிலை வடிவமைக்கப்பட்டிருப்பது பரவசத்தின் உச்சநிலையாகும்.
Tags:    

Similar News