செய்திகள்
மாணவிகள்

10 மற்றும் பிளஸ்-1 வகுப்புக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்க மாணவர்கள் விபரம் சேகரிப்பு

Published On 2021-06-13 04:43 GMT   |   Update On 2021-06-13 04:43 GMT
10 மற்றும் பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல்களை வழங்குவதற்கான பணிகளை அரசுத் தேர்வுத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

சென்னை:

கொரோனா தொற்று காரணமாக 2020-21-ம் கல்வி ஆண்டில் படித்த 10 மற்றும் பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களில் தேர்ச்சி என்று மட்டுமே குறிப்பிட்டு வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி 10 மற்றும் பிளஸ்-1 மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல்களை வழங்குவதற்கான பணிகளை அரசுத் தேர்வுத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக 2020-21-ல் பள்ளிகள் முழுவதுமாக திறக்கப்படவில்லை. கடந்த ஜனவரி மாதம் 19-ந் தேதி பிளஸ்-2, 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 9, 11 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன.


ஆனால் கொரோனா இரண்டாவது அலையால் மார்ச் 20-ந் தேதி 9, 10, 11 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.

இதனால் மாணவர்களுக்கான தேர்வு பதிவு எண்களை அரசு தேர்வுத்துறையால் வழங்க முடியவில்லை. இந்த நிலையில் 10 மற்றும் பிளஸ்-1 படித்த மாணவர்களின் விவரங்களை வரும் 14-ந் தேதி முதல் 17-ந் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து தெரிவிக்க வேண்டும் என அரசு தேர்வு இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.

இதன் அடிப்படையில் தான் 10 மற்றும் பிளஸ்-1 மாணவர்களுக்கு தேர்ச்சி என மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News